சொகுசு காரில் செம்மரக்கட்டைகள் கடத்தல்


சொகுசு காரில் செம்மரக்கட்டைகள் கடத்தல்
x
தினத்தந்தி 18 Feb 2018 3:30 AM IST (Updated: 18 Feb 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே சொகுசு காரில் செம்மரக்கட்டைகள் கடத்தியவர்களை போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சூளகிரி-ராயக்கோட்டை சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தினார்கள். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார்சினிமா பாணியில் தங்களின் இருசக்கர வாகனங்களில் காரை விரட்டி சென்றனர். சிகரலப்பள்ளி பக்கமாக கார் நின்றது. அதில் இருந்து 6 பேர் கீழே இறங்கி தப்பி ஓடினார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்த போது அதில் பல லட்சம் மதிப்புள்ள செம்மரத்தின் 9 வேர் பகுதி கட்டைகள் இருந்தன.

இதைத் தொடர்ந்து கொகுசு காரையும், செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிகரலப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு வீட்டை பெங்களூருவை சேர்ந்த கும்பல் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு எடுத்து தங்கியதும், அவர்கள் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து அங்கு பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 8 கோடாரிகள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், செம்மரக்கட்டை துண்டுகள் இருப்பது தெரியவந்தது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

இது குறித்து போலீசார் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து செம்மரக்கட்டைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தப்பி ஓடிய 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி செம்மரக்கட்டைகள் கடத்தப்படும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், ஓசூர் அருகே சூளகிரி பக்கமாக செம்மரக்கட்டைகள் சொகுசு காரில் கடத்தப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story