பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி தீவிரம் கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு


பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி தீவிரம் கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 18 Feb 2018 4:30 AM IST (Updated: 18 Feb 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

கரூர் ஒன்றிய பகுதியில் பண்ணை குட்டை அமைக்கும் பணி நடந்து வருவதை கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு செய்தார்.

கரூர்,

கரூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் பூலாம்பாளையம், வேட்டமங்கலம், திருக்காடுதுறை போன்ற ஊராட்சிகளில் பண்ணைகுட்டை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு செய்தார். மேலும் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி வீரசோளி பாளையத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்திற்கு பயன்படுத்தும் கட்டுமான பொருட்களின் தரத்தையும், ரூ.30 லட்சத்தில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் வடமலைக்கவுண்டன்புதூர் பகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை பார்வையிட்டு சமுதாயக்கூடத்தின் முன் பகுதியில் நிரந்தரமாக நிழல் தரும் கொட்டகை அமைத்து அப்பகுதியில் பலவகை அழகு செடிகளை நடவு செய்ய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அவர் உத்தரவிட்டார். அதே பகுதியில் ரூ.8 லட்சத்தில் நிலத்தடி நீர் சேகரிக்கும் உறிஞ்சு குழி அமைக்கும் பணியினை விரைவாக முடிக்க பொறியாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

இதைதொடர்ந்து வேட்டமங்கலம் ஊராட்சி நத்தமேடு பகுதியில் ரூ.ஒரு லட்சத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை அமைக்கும் பணியினை பார்வையிட்டு மழைக்காலத்தில் குட்டைக்கு தண்ணீர் வரும் வரத்து வழிகளை கண்டறிந்து அவைகளையும் சீர் செய்ய பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் பங்களா நகர் பகுதியில் ரூ.30 லட்சத்தில் புதிதாக அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படுவதை கலெக்டர் பார்வையிட்டார். ஒரு மரத்தைக்கூட வெட்டாமல் இயற்கை சூழலில் பூங்கா அமைக்கவும், அதை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இதேபோல திருக்காடுதுறை ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தில் பயனாளி ஒருவர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் பணியை பார்வையிட்டார்.

பேச்சிப்பாறை பகுதியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தில் 5 வீடுகள் கட்டும் பணி என ரூ.1 கோடியே 4 லட்சத்து 30 ஆயிரத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு விரைவாக முடிக்க உத்தரவிட்டார். மேலும் நொய்யல் சாலை முதல் பேச்சிப்பாறை வரை தெரு விளக்குகள் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கவும், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் மீனாகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புசெல்வன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். 

Next Story