மானூர் தாலுகா அலுவலகத்திற்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் அமைச்சர் ராஜலட்சுமி அடிக்கல் நாட்டினார்


மானூர் தாலுகா அலுவலகத்திற்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் அமைச்சர் ராஜலட்சுமி அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 18 Feb 2018 3:00 AM IST (Updated: 18 Feb 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

மானூர் தாலுகா அலுவலகத்திற்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் ராஜலட்சுமி அடிக்கல் நாட்டினார்.

நெல்லை,

மானூர் தாலுகா அலுவலகத்திற்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் ராஜலட்சுமி அடிக்கல் நாட்டினார்.

புதிய கட்டிடம்

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.2 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டிட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் மானூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மானூர் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.2 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் மொத்தம் 12 ஆயிரத்து 701 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளது. இந்த கட்டிடத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல வசதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடமும் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் 11 மாதத்தில் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, தாசில்தார் மேனகா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதாபரமசிவம், மாநகர் மாவட்ட அவைதலைவர் பரணிசங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. அவை தலைவர் பரணிசங்கரலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் வசந்திமுருகேசன் எம்.பி., பொருளாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறக்க உரிய நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வது. ஜெயலலிதாவின் பிறந்த நாள்விழா அன்று அவருடைய உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கவேண்டும். அன்னதானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மனோகரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சலசலப்பு

கூட்டம் நடந்த போது எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ஆறுமுகம் எழுந்து, நெல்லை மாநகர் மாவட்டத்திற்கு கட்சி அலுவலகம் இல்லை. தொண்டர்களை நிர்வாகிகள் மதிப்பது கிடையாது என்று ஆவேசமாக பேசினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Next Story