அரசு காலி பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களை நியமிக்க கோரிக்கை


அரசு காலி பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களை நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2018 3:45 AM IST (Updated: 18 Feb 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

அரசுத்துறை காலிபணியிடங்களில் சத்துணவு ஊழியர்களை நியமிக்க கோரி விருதுநகர் சத்துணவு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க விருதுநகர் கிளையின் 14-வது மாநாடு நேற்று விருதுநகர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்ற மாநாட்டை மாவட்ட தலைவர் பாத்திமா மேரி தொடங்கி வைத்தார். கிளைச் செயலாளர் ராமர், பொருளாளர் முத்து லட்சுமி ஆகியோர் முறையே வேலை அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கையினை சமர்ப்பித்தனர்.

மாநில செயலாளர் அய்யம்மாள் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முத்துராஜ், சாலைப்பணியாளர் சங்க செயலாளர் நடராஜன் மற்றும் பல்வேறு துறை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.

மாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்குவதோடு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதை போல மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 1.1.2016 முதல் 21 மாத ஊதிய உயர்விற்கான நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும். பணிக்கொடை தொகையினை இரட்டிப்பாக்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதி சந்தா தொகைக்கான வருடாந்திர கணக்கீட்டு தாளை உடனடியாக வழங்குவதோடு அரசுத்துறை காலிபணியிடங்களில் சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்திட வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு மருத்துவப்படி, பொங்கல் போனஸ் வழங்க வேண்டியது அவசியமாகும். சமையல் உதவியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமி வரவேற்று பேசினார். முடிவில் சிவஜோதி நன்றி கூறினார். 

Next Story