சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்
x
தினத்தந்தி 18 Feb 2018 3:00 AM IST (Updated: 18 Feb 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று 81-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

சிதம்பரம்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 81-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, 295 மாணவ- மாணவிகளுக்கு நேரடியாக பட்டம் வழங்கினார். இதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 45 மாணவர்களுக்கு தங்க பதக்கமும், பல்வேறு அறக்கட்டளை சார்பில் 140 பேருக்கு ரொக்க பரிசும் வழங்கினார். இவர்களை தவிர பல்கலைக்கழகத்தில் நேரடியாக படித்த 38 ஆயிரத்து 548 மாணவர்களுக்கும், தொலை தூர கல்வி இயக்கம் மூலம் பயின்ற 3 லட்சத்து 46 ஆயிரத்து 202 மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வி துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். மத்திய புலனாய்வு ஆணைய முன்னாள் இயக்குனரும், தேசிய மனித உரிமை ஆணைய தலைமை இயக்குனருமான கார்த்திகேயன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்

இளைஞர்கள் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். புதிய பாதையை தேர்வு செய்து, அதில் செல்ல வேண்டும். சமூகம், கலாசாரத்தை மதிக்க வேண்டும். அதன் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். தற்போது புயல், வெள்ளம், பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாய உற்பத்தி குறைந்து வருகிறது. விவசாயம் நலிவடைந்து வருகிறது. அரசு பயிர்க்காப்பீடு அளித்து விவசாய உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வேளாண்மை குறித்து இளைஞர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்த ஆய்வை நடைமுறைக்கு கொண்டு வந்தால் தான் விவசாய உற்பத்தியை பெருக்க முடியும்.

தானியங்கள் பல்வேறு வழிகளில் வீணாகி வருகிறது. இதன் மூலம் விவசாயி உற்பத்தி செய்த விளை பொருளில் 20 முதல் 50 சதவீதம் வரை தான் முழுமையாக கிடைக்கிறது. மற்றவை வீணாகி விடுகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருதல், மண் வளம் கெடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயம் குறைந்து வருகிறது. பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த நிலை குறைந்து விட்டது. எனவே இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்.

இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு கல்வி அளிக்க நாம் பல சவால்களை எதிர்நோக்கி இருக்கிறோம். அதிக இளைஞர்கள் கிராமப்புறங்களில் இருந்து தான் வருகிறார்கள். இந்தியாவில் 563 பல்கலைக்கழகங்கள் உள்ளன. சீனாவில் 1100 பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 20 சதவீதம் பேர் தான் வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் பயிற்சி கொடுத்து தான் வேலைவாய்ப்புக்கு தயார் படுத்த வேண்டியதிருக்கிறது. நமக்கு 1500 பல்கலைக்கழகங்கள் தேவைப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு உயர்கல்வி, திறமையை அளிக்க வேண்டும். இதற்கு நாம் உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் கூறினார்.

முன்னதாக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயர்கல்வியை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றார். 5 ஆண்டு கால ஆட்சியில் உயர்கல்வி துறையில் 65 புதிய கல்லூரிகளை கொண்டு வந்தார். 1231 புதிய பாடத்திட்டங்களை கொண்டு வந்தார். இதன் மூலம் உயர்கல்வி உயர்ந்த நிலையில் இருக்கிறது. அதே வழியில் செயல்படும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 11 புதிய கல்லூரிகளை கொண்டு வந்துள்ளது. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றபிறகு மாநில பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. அரசு இந்த பல்கலைக்கழகத்துக்கு ரூ.1063.65 கோடி மானியம் வழங்கி உள்ளது என்றார்.

விழாவில் கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால், உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் சுனீல்பாலிவால், சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம், கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, சட்டமன்ற உறுப்பினர்கள் பாண்டியன், முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பதிவாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

முன்னதாக கவர்னர் பன்வாரிலால்புரோகித் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.30 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட தாமரைகுளத்தை திறந்துவைத்தார். மேலும் ரூ.1.82 கோடி செலவில் சூரிய ஒளி தகடு பதிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக சென்னையில் இருந்து உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று அதிகாலை 3.15 மணிக்கு சிதம்பரத்துக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வந்தார். ரெயில் நிலையத்தில் அவரை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்த அவர், காலை 9.52 மணிக்கு ஓமகுளம் நந்தனார் மடத்திற்கு சென்றார். அங்கு சிவலோகநாதர்கோவிலில் சாமி தரிசனம் செய்த, அவர் நந்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு நந்தனார் ஜீவசமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து 10.07 மணிக்கு சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தை பார்வையிட்டு, சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்தார். இதையடுத்து 11.30 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு என்.சி.சி. மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.

Next Story