திருத்தங்கல் போலீஸ் நிலையத்துக்கு கூடுதல் போலீசார் நியமிக்க வலியுறுத்தல்


திருத்தங்கல் போலீஸ் நிலையத்துக்கு கூடுதல் போலீசார் நியமிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Feb 2018 3:30 AM IST (Updated: 18 Feb 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

திருத்தங்கல் போலீஸ் நிலையத்துக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி,

சிவகாசி உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் அதிக கிராமங்களை உள்ளடக்கியது திருத்தங்கல் போலீஸ் நிலையம். திருத்தங்கல் நகராட்சி பகுதி, சிவகாசி ஒன்றிய பகுதியில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் வருகிறது. மேலும் பட்டாசு ஆலைகளும், இதர தொழிற்சாலைகளும் அதிகம் உள்ள பகுதி. ஆனால் போதிய போலீசார் இல்லாமல் குறைந்த அளவு போலீசாரைக் கொண்டு இந்த போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் தொகைக்கு ஏற்பவே தற்போதும் போலீசார் இருப்பதால் ரோந்து பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சில பகுதிகளுக்கு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடாமல் இருப்பதால் அங்கு சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசு மதுபான கடைகளின் பார்கள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் மதுபான கடையின் அருகில் அனுமதியின்றி பார்கள் செயல்படுகிறது. இதை யாரும் கண்டுகொள்வதில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தங்கல் போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். பிரச்சினை வரும் போது மட்டும் போலீசார் கண்துடைப்புக்காக சில நடவடிக்கைகளை செய்கிறார்கள். ஆனால் நிரந்தரதீர்வு காண முயலுவதில்லை. எனவே கூடுதலான போலீசாரை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story