வேலைக்கு சென்றவுடன் கல்வி கடனை மாணவ–மாணவிகள் திருப்பி செலுத்த வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு


வேலைக்கு சென்றவுடன் கல்வி கடனை மாணவ–மாணவிகள் திருப்பி செலுத்த வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
x
தினத்தந்தி 18 Feb 2018 3:00 AM IST (Updated: 18 Feb 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

கல்விகடன் பெறும் மாணவ–மாணவிகள், வேலைக்கு சென்றவுடன் திருப்பி செலுத்த வேண்டும், என்று கலெக்டர் சந்தீப்நந்தூர் தெரிவித்தார்.

நெல்லை,

கல்விகடன் பெறும் மாணவ–மாணவிகள், வேலைக்கு சென்றவுடன் திருப்பி செலுத்த வேண்டும், என்று கலெக்டர் சந்தீப்நந்தூர் தெரிவித்தார்.

கல்வி கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பிளஸ்–2 முடித்து கல்லூரி படிக்கின்ற மாணவ–மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் முகாம் நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமை தாங்கி மாணவ–மாணவிகளுக்கு கடன் விண்ணப்ப படிவங்களை வழங்கி முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

தமிழக அரசு ஏழை, எளிய மாணவ, மாணவிகள் சிறப்பாக கல்வி கற்கவேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மாணவ–மாணவிகளின் உயர் கல்வி கற்க பொருளாதார ரீதியாக தடை ஏற்படாத வகையில் வங்கிகளின் மூலம் கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.51½ லட்சம்

2016–2017–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–2 முடித்து உயர்கல்வி படிக்கும் மாணவ–மாணவிகள் கல்வி கடன் பெறுவதில் உள்ள சிரமத்தை போக்க பள்ளி கல்வித்துறையின் சார்பில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. இதை நீங்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்வி கற்று சிறந்த வேலைகளுக்கு சென்று கல்வி கடன்களை திரும்ப செலுத்த வேண்டும். அப்போது தான் தொடர்ந்து அடுத்து வரும் மாணவ–மாணவிகளுக்கும் வங்கிகள் கல்வி கடன் வழங்க ஏதுவாக இருக்கும். இங்கு பல்வேறு வங்கிகளின் அலுவலர்கள் வந்து உள்ளனர். கல்வி கடன் பெறுவது குறித்து மாணவ–மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முகாமில் 16 கல்லூரி மாணவ–மாணவிகளிடம் ரூ.51 லட்சத்து 70 ஆயிரம் கல்வி கடனுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

முகாமில் முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம், முன்னோடி வங்கி மேலாளர் கஜேந்திரநாதன், பாளையங்கோட்டை தாசில்தார் தங்கராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயராஜ் (சேரன்மாதேவி), ரதிபாய் (தென்காசி), சின்னத்துரை(நெல்லை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story