மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Feb 2018 3:00 AM IST (Updated: 18 Feb 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் ஆய்வு செய்தார்.

கடலூர்,

கடலூர் கம்மியம்பேட்டை, கூத்தப்பாக்கம் பகுதியில் கெடிலம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியையும், மழைநீர் வடிகால் வாய்க்காலையும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து திருவந்திபுரம் அணைக்கட்டு பகுதியை பார்வையிட்ட கலெக்டர், வீடுகளின் அருகில் அணைக்கட்டு இருப்பதால் கரையின் இருபுறமும் கைப்பிடி சுவர் அமைக்க வேண்டும், இந்த பகுதியில் பூங்கா அமைத்து பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் பெரியகாட்டுப்பாளையம் ஓடை கரையை பலப்படுத்தும் பணியை பார்வையிட்ட கலெக்டர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து கீழிருப்பு-மேலிருப்பு பாலப்பணி, கீழிருப்பு ஓடையில் தூர்வாரும் பணி மற்றும் கரையை பலப்படுத்தும் பணி, மேலிருப்பு ஓடை கரையை பலப்படுத்தும் பணி மற்றும் தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ள இடங்களையும், விசூர் ஓடை கரையை பலப்படுத்தும் பணி மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர் மோகன்ராம், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், விருத்தாசலம் வெள்ளாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர்கள் கபிலன், வெங்கடேசன், பண்ருட்டி தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story