குன்னூரில் முதல்-அமைச்சரை வரவேற்க வைத்திருந்த 10 அடி உயர அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்ததில் வியாபாரி படுகாயம்


குன்னூரில் முதல்-அமைச்சரை வரவேற்க வைத்திருந்த 10 அடி உயர அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்ததில் வியாபாரி படுகாயம்
x
தினத்தந்தி 18 Feb 2018 4:00 AM IST (Updated: 18 Feb 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் முதல்- அமைச்சரை வரவேற்க வைத்திருந்த 10 அடி உயர அ.தி.மு.க. கொடிக்கம்பம் கீழே விழுந்ததில் வியாபாரி படுகாயம் அடைந்தார்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டரையில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். குன்னூர் வந்த முதல்-அமைச்சரை வரவேற்க நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பல இடங்களில் வரவேற்பு பேனர் கள், பெரிய அளவிலான கொடிகள் வைக்கப்பட்டு இருந்தன. குன்னூர் நகர பகுதிகளிலும் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் லாஸ்பால்ஸ் அருகே 10 அடி உயரத்துக்கு இரும்பு கம்பங்கள் நடப்பட்டு அதில் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த நிலையில் அதில் ஒரு கம்பம் கொடியுடன் நேற்று காலை 7.30 மணி அளவில் திடீரென்று காற்றில் சரிந்து கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது அந்த கம்பம் விழுந்ததால் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை, கால்களில் படுகாயம் ஏற்பட்டது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்று அவரை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் நடத்திய விசாரணையில், கொடிக்கம்பம் கீழே விழுந்ததில் காயம் அடைந்தவர் குன்னூர் பஜார் தெருவை சேர்ந்த பாரூக் (வயது 65) என்பதும், குன்னூர் மார்க்கெட்டில் ரேடியோ, டி.வி. விற்பனை நிலையம் நடத்தி வருவதும் தெரியவந்தது.

மேலும் அவர் வியாபார விஷயமாக கோவை சென்று விட்டு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் குன்னூர் வந்த போது விபத்தில் சிக்கி கொண்டார் என்பது தெரிய வந்தது. காயம் அடைந்த பாரூக்குக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Next Story