பலகோடி ரூபாய் மோசடி செய்த நிரவ் மோடி பா.ஜனதாவின் கூட்டாளி சிவசேனா பகிரங்க குற்றச்சாட்டு


பலகோடி ரூபாய் மோசடி செய்த நிரவ் மோடி பா.ஜனதாவின் கூட்டாளி சிவசேனா பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Feb 2018 4:00 AM IST (Updated: 18 Feb 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

பலகோடி ரூபாய் மோசடி செய்துள்ள வைர வியாபாரி பா.ஜனதா கட்சியின் கூட்டாளி என சிவசேனா கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

மும்பை,

பலகோடி ரூபாய் மோசடி செய்துள்ள வைர வியாபாரி பா.ஜனதா கட்சியின் கூட்டாளி என சிவசேனா கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

ரூ.11,700 கோடி மோசடி

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றில் ரூ.11,700 கோடி அளவுக்கு மோசடி நடந்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தநிலையில் இந்த மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பினார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

கூட்டாளிகள்

நிரவ் மோடி நாட்டை விட்டு வெளியேறியது கடந்த ஜனவரி மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் கடந்த சில வாரத்திற்கு முன்னால் டாவோஸ் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துள்ளார். நிரவ் மோடி பா.ஜனதா அரசின் கூட்டாளியாவார். தேர்தலின் போது அக்கட்சி நிதி திரட்ட அவர் உதவி புரிந்துள்ளார்.

இல்லையென்றால் யார் அவருக்கு மற்ற முதலீட்டாளர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கொடுத்திருக்க முடியும்?

விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் ரூ.100, ரூ.500 கடனை திரும்ப செலுத்த வழி தெரியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் கோடி, கோடியாக மோசடி செய்துவிட்டு சிலர் நாட்டை விட்டு காணாமல் போகிறார்கள். மற்றொரு பக்கம் கோடிக்கணக்கில் பணத்தை கரியாக்கி அவர்கள்(பா.ஜனதா) கடந்த 3 ஆண்டுகளாக ஊழலற்ற இந்தியா குறித்தும், வெளிப்படையான ஆட்சி குறித்தும் விளம்பரம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா, பாஜனதாவை வெளிப்படையாக விமர்சித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story