புதுச்சேரி அருகே ரூ.77½ லட்சத்துடன் ஏரிக்கரையில் நின்ற வாகனத்தால் பரபரப்பு


புதுச்சேரி அருகே ரூ.77½ லட்சத்துடன் ஏரிக்கரையில் நின்ற வாகனத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Feb 2018 3:57 AM IST (Updated: 18 Feb 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அருகே ரூ.77½ லட்சத்துடன் ஏரிக்கரையில் நின்ற வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்,

புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த ‘பீட்’ போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முள்ளோடை குருவிநத்தம் சாலை பரிக்கல்பட்டு ஏரிக்கரை பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் வாகனம் ஒன்று அங்கு நின்று கொண்டு இருந்தது. இதைப் பார்த்த ‘பீட்’ போலீசார் வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ஊழியர் ஒருவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஏரிக்கரைக்கு வந்ததாக மற்ற ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த வாகனத்தில் பாதுகாப்பு அதிகாரி இல்லாததால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி ஆகியோர் வாகனத்தில் இருந்த ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். அப்போது கடலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்காக வந்த வாகனம் அது என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வங்கி அதிகாரிகள் ரூ.77½ லட்சத்தை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி பணம் உள்ளதா? என்பதை போலீசார் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தை திறந்து காட்டிய ஊழியர்கள் கட்டுக் கட்டாக பணத்தை சாதாரணமாக பைகளில் வைத்திருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைத்தனர். உரிய பாதுகாப்பு இல்லாமல் பணத்தை கொண்டு வந்த ஊழியர்களை போலீசார் கண்டித்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரிக்கரையில் ரூ.77½ லட்சம் பணத்துடன் நின்ற இந்த வாகனத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story