விவசாயி உருவாக்கிய பால் வழங்கும் ‘ஏ.டி.எம்.’


விவசாயி உருவாக்கிய பால் வழங்கும் ‘ஏ.டி.எம்.’
x
தினத்தந்தி 18 Feb 2018 2:45 PM IST (Updated: 18 Feb 2018 12:57 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் லாபம் தரும் நோக்கில் பால் வழங்கும் ஏ.டி.எம்.களை வடிவமைத்திருக் கிறார், நீலேஷ் குஷார்.

விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் லாபம் தரும் நோக்கில் பால் வழங்கும் ஏ.டி.எம்.களை வடிவமைத்திருக் கிறார், நீலேஷ் குஷார். இவர் குஜராத் மாநிலம் ஜிர் சோமந்த் மாவட்டத்திலுள்ள தலாலா என்ற கிராமத்தை சேர்ந்தவர். 28 வயது விவசாயியான நீலேஷ் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். எனினும் சிறுவயதில் இருந்தே மெஷின்களை பிரித்துப் பார்த்து பொருத்துவதில் ஆர்வமிக்கவராக இருந்திருக்கிறார். பால் வியாபாரமும் செய்து வந்திருக்கிறார்.

காலை, மாலை நேரங்களில் பால் விற்பனை செய்வதற்காக நெடுந்தூரம் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. இடைத்தரகர்களையும் நாட வேண்டியிருந்ததால் குறைந்த அளவே வருமானம் கிடைத்திருக்கிறது. மற்றவர்களை சார்ந்திராமல் சொந்தமாக தாமே பாலை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் பால் வழங்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

எந்திரங்களை கழற்றி மாட்டுவது நீலேஷுக்கு பிடித்தமான விஷயங் களாக இருந்ததால் தாமே சுயமாக பால் வழங்கும் எந்திரத்தை வடிவமைக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். இவருடைய கைவண்ணத்தில் இயங்கும் பால் வழங்கும் ஏ.டி.எம். மூன்றுவிதமான பயன்பாடுகளை கொண்டிருக்கிறது. கைவிரல் பதிவுகளை பயன்படுத்துவது, சம்பந்தப்பட்டவர்களின் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்நுழைப்பது, கார்டுகளை உபயோகிப்பது போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஏ.டி.எம். மூலம் பால் பெற்றுக்கொள்ளலாம்.

நீலேஷ் ஆரம்பத்தில் ரூ.20, ரூ.50, ரூ.100 ஆகிய நோட்டுக்களை உள் நுழைத்து பால் பெறும் வகையில் மெஷினை வடிவமைத்திருக்கிறார். குறைந்த விலையில் பால் வழங்கியதால் பொதுமக்கள் மத்தியில் இவருடைய ஏ.டி.எம். மெஷினுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற விவசாயிகள் நீலேஷை சந்தித்து தங்களுக்கும் அதுபோல் ஏ.டி.எம். மெஷினை வடிவமைத்து தருமாறு கேட்டிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மெஷின்களை நவீனமாக வடிவமைத்து கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு, ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் நீலேஷ் உருவாக்கிய பால் ஏ.டி.எம்.களை விவசாயிகள் நிர்வகிக்கிறார்கள். ஒரு மெஷினில் 50 முதல் 250 லிட்டர் பாலை சேமித்து வைக்கலாம். பால் வாங்குபவர்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து வைத்தால் போதும். மூன்று விதமான வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றி பாலை பெற்றுக்கொள்ளலாம். இணையதள வங்கி கணக்கு மூலமாகவும் பணத்தை வசூல் செய்து கொள்ளலாம்.

‘‘கறவை மாடுகளை வளர்க்கும் விவசாயிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே இருக்கும் இடைத்தரகர்களை அகற்ற விரும்பினேன். மற்றவர்களை சார்ந்திருந்து விற்பனை செய்வதை காட்டிலும் விவசாயிகள் ஒன்றரை மடங்கு லாபம் ஈட்டலாம். மின்சாரம் இல்லாத வேளையில் இயங்கும் வகையிலும், பாலை பதப்படுத்தும் விதத்திலும் மெஷினை உருவாக்கி இருக்கிறேன். ஒரு மெஷினை வடிவமைப்பதற்கு 75 ஆயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஓராண்டுக்குள்ளாகவே மெஷினுக்காக செலவளித்த பணத்தை வசூலித்துவிடலாம். மூன்றுக்கு மேற்பட்ட பசுமாடுகளை வைத்திருந்தால் பால் விற்பனை மூலம் நல்ல லாபம் ஈட்டலாம்’’ என்கிறார், நீலேஷ் குஷார்.

Next Story