வில்லோடு விளையாடும் சிறுமிகள்


வில்லோடு விளையாடும் சிறுமிகள்
x
தினத்தந்தி 18 Feb 2018 3:15 PM IST (Updated: 18 Feb 2018 1:06 PM IST)
t-max-icont-min-icon

தங்கமே...என்று தனது குழந்தைகளை பெற்றோர் அழைப்பதுண்டு. ஆம்...அந்த சொல்லுக்கு பொருத்தமானவர்களாக இந்த இரு சகோதரிகளும் உள்ளனர். வில்வித்தையில் சாதித்து தங்கம், வெள்ளி என பதக்கங்களை அள்ளி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் லீலா கிருஷ்ணன். இவரது மனைவி நளினி ஸ்ரீ. இவர்களுடைய மகள்கள் சங்கீர்னா (வயது 7), காயத்திரி (6). இவர்கள் இருவரும் கோவையில் உள்ள செயிண்ட் பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் வில்வித்தை போட்டியில் சிறந்து விளங்குகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காயத்திரி முதலிடம் பிடித்து தங்கம்வென்றார். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சங்கீர்னா 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இந்த வெற்றியை தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள (பிரின்ஸஸ் வேல்ர்டு கப்) சர்வதேச போட்டியில் களம் இறங்க உள்ளனர்.

இதற்காக கோவையில் உள்ள தியாகி என்.ஜி.ஆர்.மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர்கள் இரு வரையும் சந்தித்தோம். அப்போது அவர்கள் கூறியதாவது:-

“நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். வில்வித்தை என்பது மன்னர்காலத்து விளையாட்டு என்று தோன்றலாம். ஆனால் இதில் ஈடுபாடு காட்டினால் துப்பாக்கி சுடும் பயிற்சியை விட இது மனதை கவரக் கூடியதாக இருக்கும். நாங்கள் சர்வதேச அளவில் சாதிப்பதற்காக காம்பவுண்ட் போவ் என்ற வகை வில்லை பயன்படுத்தி விளையாடி வருகிறோம். எங்கள் தந்தை வில்வித்தை பயிற்சியாளர். தலா ரூ.2 லட்சம் செலவில் அதனை எங்களுக்காக வாங்கித்தந்துள்ளார். அந்த வில் 4 கிலோ எடை கொண்டது. அதை பயன்படுத்தி அம்பு எய்ய கடுமையான பயிற்சி அவசியம். தினசரி நாங்கள் காலை 3 மணிநேரமும், மாலை 3 மணிநேரமும் பயிற்சி பெறுகிறோம்.

பயிற்சியாளர் எங்கள் தந்தை என்பதால், காலையில் பள்ளிக்கு செல்லும் முன்பும், மாலையில் பள்ளியை விட்டு வந்த பிறகும் இடைவிடாத பயிற்சி இருந்து கொண்டே இருக்கும். விடுமுறை நாட்களில் கூடுதலாக பயிற்சி பெறுவோம். அம்பை எய்திடும்போது, இலக்கு வரைபடத்தில் உள்ள மத்தியில் உள்ள வட்டத்தில் அம்பு போய் நின்றால் அதற்கு 10 புள்ளிகள் கிடைக்கும். அதனை அடுத்துள்ள வட்டங்களுக்கு தகுந்தாற்போன்று புள்ளிகள் குறையும். அம்பு பாயும் தூரம் 45 மீட்டர் வரை இருக்கும். எங்கள் வெற்றிக்கு பள்ளி ஆசிரியர்களும் காரணம். தேசிய போட்டியில் வெற்றிபெற்ற நாங்கள் அடுத்ததாக சர்வதேச அளவில் நடைபெறும் போட்டி களில் பங்கேற்க உள்ளோம். அதில் வெற்றிபெறும்போது ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெறுவோம். ஒலிம்பிக் போட்டி எங்களது கனவாக உள்ளது” என்றார்கள்.

இந்த இளம் சாதனையாளர்களின் தந்தை லீலா கிருஷ்ணன் சொல்கிறார்:

“நான் சிறுவயதில் இருந்தே வில்வித்தை பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்றேன். எனக்குள் வில்வித்தை மீது இருந்த ஆர்வம் திருமணம் ஆகியும் குறையவில்லை. அதனால் வில்வித்தை பயிற்சியாளராக மாறினேன். எனது குழந்தைகளுக்கும் வில்வித்தையில் பயிற்சி கொடுக்க விரும்பினேன். அவர்கள் அதில் அதிக ஈடுபாடு காட்டத்தொடங்கினார்கள். அவர்களை எப்படியும் ஒலிம்பிக் வரை கொண்டு சென்று விட வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம். வில்வித்தை பயிற்சியில் ஈடுபடுவோருக்கு உடற்திறன் உறுதியாக இருக்க வேண்டும். ஆகவே எனது குழந்தைகளுக்கு தினசரி சிக்கன், மட்டன், முட்டை போன்ற அசைவ உணவுகளை வழங்குகிறோம். இது தவிர பழம், காய்கறிகள், ஜூஸ் கொடுக்க வேண்டும். இவர்களுக்காகவே தனி உணவுப்பட்டியல் தயாரித்து, அதன்படி வழங்கி வருகிறோம்.

சிறுவயதிலேயே கனமான வில்லை தூக்கி எடுத்து நிறுத்துவதற்கான வலிமை எனது குழந்தைகளிடம் உள்ளது. அதற்கு கடவுளின் அருளும் ஒரு காரணம். வில்வித்தை பயிற்சியில் ஈடுபடும்போது கவனத்தை ஒருநிலைப்படுத்த முடியும். இதனால் விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும், வாழ்வியலிலும், பொதுஅறிவிலும் இவர் களால் சிறந்து விளங்க முடியும். நல்ல மதிப்பெண் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். மூத்த மகள் ஐ.ஏ.எஸ்.படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இளையமகள் டாக்டராக விரும்புகிறாள். வில்வித்தை விளையாட்டு என்பது மனம், புத்தி, உடல், ஆத்மா, காற்று என்கிற ஐந்தையும் ஒரே நேர்கோட்டில் கொண்டுவந்து ஈடுபடுவதாகும். இதில் நிறைய சாதனையாளர்கள் உருவாக அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்” என்றார்.

Next Story