வைட்டமின் சத்து உடலுக்கு ஏன் தேவை?


வைட்டமின் சத்து உடலுக்கு ஏன் தேவை?
x
தினத்தந்தி 18 Feb 2018 3:54 PM IST (Updated: 18 Feb 2018 3:54 PM IST)
t-max-icont-min-icon

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்களும், தாதுக்களும் அவசியமான ஊட்டச்சத்துகளாக விளங்குகின்றன.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்களும், தாதுக்களும் அவசியமான ஊட்டச்சத்துகளாக விளங்குகின்றன. எந்தெந்த உணவுகளில் அத்தகைய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன? அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

1. வைட்டமின் ஏ:

நன்மைகள்: பொதுவான உடல் வளர்ச்சி மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது. பற்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கிறது.

சாப்பிடவேண்டியவை: கேரட், ஆரஞ்சு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, முலாம்பழம். இவை அனைத்திலும் கரோட்டின் நிறமி அதிகளவில் இருக்கிறது.

2. வைட்டமின் பி:


நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான சக்தியையும் வழங்குகிறது.

கிடைக்கும் பொருட்கள்: பதப் படுத்தப்படாத உணவுகள், குறிப்பாக முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, வாழைப்பழங்கள், பீன்ஸ், மிளகுத்தூள், பயறு வகைகள், வெல்லப்பாகு.


3. வைட்டமின் சி:

நன்மைகள்: ரத்தக்குழாய்களை வலுப்படுத்தும். சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையும் கொடுக்கும்.

சாப்பிட வேண்டியவை: ஆரஞ்சு, கொய்யா, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கிவி பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, பரங்கிக்காய்.


4. வைட்டமின் டி:

நன்மைகள்: எலும்புகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.

சாப்பிட வேண்டியவை: காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே உடலுக்கு தேவையான வைட்டமின் டி உற்பத்தியாக தொடங்கிவிடும். முட்டை, மீன், காளான்களை சாப்பிடுவதன் மூலமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறலாம்.


5. வைட்டமின் ஈ:

நன்மைகள்: ரத்த சுழற்சியை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. பிறவகை கொட்டகைகள், சூரியகாந்தி விதைகள், தக்காளி போன்றவற்றிலும் அதிகம் உள்ளது.


6. வைட்டமின் கே:

நன்மைகள்: ரத்தக்குழாய்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள், ப்ராக்கோலி.

7. போலிக் அமிலம்:

நன்மைகள்: புதிய செல்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது. பெண்களுக்கு பிரசவகால சிக்கலையும் தடுக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், ப்ராக்கோலி, காலிபிளவர், பீட்ரூட், சோளம்.

8. கால்சியம்:

நன்மைகள்: பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, பால், சோயா தயிர், கருப்பட்டி.

9. இரும்புச்சத்து:

நன்மைகள்: உடல் தசைகளை வலுப்படுத்தும். ரத்த அளவை சீராக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: சோயாபீன்ஸ், தானியங்கள், பூசணி விதை, பீன்ஸ், பருப்புவகைகள், கீரை வகைகள்.


10. துத்தநாகம்:

நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். கருவுறுதல் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: கடல் உணவுகள் துத்தநாகம் நிறைந்தவை. கீரை வகைகள், முந்திரி பருப்பு, பீன்ஸ், கருப்பு சாக்லேட்டுகள் போன்றவற்றிலும் நிறைந்திருக்கிறது.


11. குரோமியம்:

நன்மைகள்: உடலுக்கு தேவையான குளுக்கோஸை வழங்கும். மேலும் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: முழு தானியங்கள், பச்சைக்காய்கறிகள், கீரைகள்.

Next Story