உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விரைவில் தொடங்கப்படும்


உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விரைவில் தொடங்கப்படும்
x
தினத்தந்தி 19 Feb 2018 3:00 AM IST (Updated: 18 Feb 2018 10:43 PM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விரைவில் தொடங்கப்படும் என்று சாலைப்பணிகள் தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாநகரில் 362 சாலைகளை ரூ.94.39 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு செய்வதற்கான பணிக்கான பூமிபூஜை நேற்று பள்ளப்பட்டியில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பன்னீர்செல்வம் எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சாலை சீரமைப்பு பணிக்கான பூமிபூஜையை தொடங்கி வைத்தும், திட்டப்பணிக்கான அடிக்கல்லும் நாட்டினார்.

சேலம் மாநகரில் பாதாள சாக்கடை திட்டம், மின்சார கேபிள் பதிக்கும் திட்டம் ஆகியவற்றிற்காகவும், குடிநீர் குழாய்கள் பதிக்கவும், தடையில்லா மின்சார கேபிள் பதிப்பதற்காகவும் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டன. அச்சாலைகளை சீரமைக்க மொத்தம் ரூ.142 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அவற்றில் முதல் கட்டமாக 362 சாலைகள் ரூ.94.39 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சேலம் மாநகரம் ‘ஸ்மார்ட் சிட்டி‘க்கு தேர்வாகி விட்டது. சாலைகள் சீரமைப்பு, அடுக்குமாடி வாகன நிறுத்தம், பழைய பஸ் நிலையம், போஸ் மைதானம் மற்றும் திருமணி முத்தாறு சீரமைப்பு என ரூ.1,908 கோடியே 60 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டம் முழுமையடையும்போது சேலம் சுகாதாரமான நகரமாக மாறும். கடந்த 30.9.2017 அன்று ரூ.13 கோடி மதிப்பீட்டில் சேலம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய நகர்ப்புற திட்டத்தின்கீழ் ரூ.3 கோடியே 39 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 6 ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தில் திடக்கழிவு மேம்பாட்டிற்காக கம்பேக்ட் வாகனங்கள், குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அம்ரு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 94 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் 4 பசுமைவெளி பூங்கா திறக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் உணவு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்டையாம்பட்டி பிரிவு ரோட்டில் இருந்து ஓமலூர் வரை இணைக்கும் வகையில் புதிய புறவழிச்சாலைக்கான ஆய்வும் செய்யப் பட்டுள்ளது. இதனால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்து விபத்துகளும் இருக்காது. விமான நிலையத்தைபோல சேலம் அரபிக்கல்லூரி அருகில் 70 ஏக்கர் பரப்பளவில் ‘பஸ்போர்ட்‘ நவீன வசதிகளுடன் திறக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

சேலம்-திருப்பத்தூர் இடையே 4 வழிச்சாலையாக மாற்ற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி வழியாக தாரமங்கலம் வரை புறவழிச்சாலையும். ஆத்தூர்-பெரம்பலூர் சாலை விரிவுப்படுத்தப்படும். நாமக்கல்-திருச்சி சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் மத்திய அரசு மூலம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விரைவில் தொடங்கப்படும். இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஒருவர் மின்சாரம் தாக்கி தனது 2 கைகளையும் இழந்தார். அவருக்கு, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவரின் இரு கைகளும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் இந்தியாவிலேயே முதன் முதலாக பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மருத்துவத்துறை பெரிய முன்னேற்றங்களை கண்டு வருகிறது. உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் பெற்று 3 விருதுகளை பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் அம்மா ஸ்கூட்டர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு என்றும் உங்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றும்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, வெற்றிவேல், ராஜா, மருதமுத்து, சின்னத்தம்பி, சித்ரா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், உதவி கலெக்டர் குமரேஸ்வரன், சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் அசோகன், காமராஜ், ரவி, மாநகர் நல அலுவலர் டாக்டர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story