“கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொன்றேன்” பெண் பரபரப்பு வாக்குமூலம்


“கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொன்றேன்” பெண் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 18 Feb 2018 11:15 PM GMT (Updated: 18 Feb 2018 5:18 PM GMT)

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொன்றதாக, 2 வாலிபர்களுடன் கைதான பெண் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தக்கலை,

குமரி மாவட்டம் பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி சுதா (37). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

ராஜசேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2007–ம் ஆண்டு ஊருக்கு வந்த அவர், அதன் பின்பு திடீரென மாயமானார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சுதாவிடம் கேட்டனர். அப்போது, ராஜசேகர் வெளிநாட்டு வேலைக்கு மீண்டும் சென்று விட்டதாக சுதா கூறி வந்தார். ஆனால், ராஜசேகர் அதன் பின்பு ஊருக்கு திரும்பி வரவில்லை.

இதனால் சுதா மீது அவருடைய அண்ணன் ரவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராஜசேகர் மர்மமான முறையில் மாயமாகி இருப்பதாக கூறி அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராஜசேகரை, அவரது மனைவி சுதாவும், கள்ளக்காதலனும் சேர்ந்த கொலை செய்து, பிணத்தை வீட்டின் பின்பக்கம் உள்ள கழிவறை தொட்டியில் வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம், ராஜசேகரின் உடல் புதைக்கப்பட்ட கழிவறை தொட்டியை போலீசார் திறந்து ஆய்வு செய்தனர். அப்போது, அதில் எலும்பு துண்டுகள், ராஜசேகரின் செருப்பு போன்றவை கைப்பற்றப்பட்டன. அவற்றை போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சுதா மற்றும் அவரது கள்ளக்காதலர்கள் ஆன்லின் ஷிபு, செல்வின் ராபர்ட் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். சுதாவை போலீசார் கொலை நடந்த இடத்துக்கு நேரில்  அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், சுதா போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

நானும், எனது கணவர் ராஜசேகரும் 2003–ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எனது கணவரை பார்க்க அவரது நண்பர் ஆன்லின் ஷிபு எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அப்போது, அவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம்.

எங்களின் உல்லாச வாழ்க்கைக்கு ராஜசேகர் தடையாக இருந்தார். இதனால், அவரை வெளிநாட்டு வேலைக்கு செல்லும்படி கூறினேன். ஆனால், அவர் வெளிநாடு செல்ல மறுத்தார். நான் கட்டாயப்படுத்தி அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தேன். அவர் வெளிநாடு சென்ற பிறகு நானும், ஆன்லின் ஷிபுவும் ஜாலியாக இருந்தோம்.

இந்த நிலையில் திடீரென  ராஜசேகர் ஊருக்கு திரும்பி வந்து விட்டார். அவர் எங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி, நானும், ஆன்லின் ஷிபுவும் சேர்ந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு உடலை கழிவறை தொட்டியில் புதைத்தோம்.

அக்கம் பக்கத்தினர் ராஜசேகர் குறித்து கேட்ட போது, வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றிருப்பதாக கூறி வந்தேன். இதற்கிடையே உல்லாச வாழ்க்கைக்காக எனது மகனை விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்தேன்.

2013–ம் ஆண்டு வரை கொலை நடந்த வீட்டில் வசித்து வந்தேன். அதன்பின்பு, கருங்கல் பகுதிக்கு வாடகை வீட்டுக்கு சென்றேன். அங்கு செல்வின் ராபர்ட் மீது எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அதன்பின்பு, தேங்காப்பட்டணம், புதுக்கடை என பல இடங்களில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன்.

11– ஆண்டுகளுக்கு பின்பு, போலீசார் மோப்பம் பிடித்து தற்போது என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story