திருவெண்ணெய்நல்லூர் அருகே வாய்க்காலில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு


திருவெண்ணெய்நல்லூர் அருகே வாய்க்காலில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு
x
தினத்தந்தி 19 Feb 2018 3:00 AM IST (Updated: 18 Feb 2018 11:22 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே வாய்க்காலில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள், நீரில் மூழ்கி இறந்தனர்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொத்தனூர் என்ற கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் கிரி (வயது 9). அதே கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் மகன் பாலாஜி (7). இவர்களில் கிரி சரவணப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பும், அதே பள்ளியில் பாலாஜி 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் கிரியும், பாலாஜியும் சேர்ந்து காலை 10.30 மணியளவில் கொத்தனூர் பகுதியில் உள்ள ராகவன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர். அவர்கள் இருவரும் தங்கள் உடைகளை கழற்றி வைத்துவிட்டு வாய்க்காலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அந்த வாய்க்காலில் நேற்று வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் அதிகமாக வந்தது.

இதனால் கிரியும், பாலாஜியும் நீந்தி கரைக்கு வர முயன்றனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் வர முடியவில்லை. உடனே அவர்கள் இருவரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். ஆனால் அந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் செல்லாததால் சிறுவர்களை காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதனிடையே வாய்க்காலில் குளிக்க சென்ற இருவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுவர்களை தேடி அவர்களது பெற்றோர்கள், அந்த வாய்க்காலுக்கு சென்றனர். அப்போது கிரி, பாலாஜி ஆகியோரின் உடல்கள், வாய்க்கால் கரையோரம் ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்ததும் சிறுவர்களின் உடலை கட்டிப்பிடித்து அவர்களது பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாய்க்காலில் மூழ்கி பலியான சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்கச்சென்ற 2 சிறுவர்கள், வாய்க்காலில் மூழ்கி பலியான சம்பவத்தினால் கொத்தனூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story