கோவையில் மீன் பிடிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி சிறுவன் பலி


கோவையில் மீன் பிடிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 19 Feb 2018 3:45 AM IST (Updated: 19 Feb 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மீன் பிடிக்க சென்றபோது குளத்தில் தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

கோவை,

கோவை உக்கடம் மஜித் காலனியை சேர்ந்தவர் அசைனார் என்கிற முத்து (வயது 48). இவரது மகன் முகமது செபீக் (9). இவன் அங்குள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4.30 மணிக்கு முகமது செபீக் உள்பட 4 சிறுவர்கள் வாலாங்குளத்தின் கரையில் நின்று மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென்று முகமது செபீக் கால் தவறி குளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்க தொடங்கினான். இதனை கண்ட மற்ற சிறுவர்கள் கூச்சல் போட்டனர். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். சில இளைஞர்கள் தண்ணீருக்குள் குதித்து முகமது செரீப் காப்பாற்ற முயன்றனர். மேலும் இதுகுறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அந்த பகுதி இளைஞர்கள் சிறுவன் முகமது செபீக்கை தண்ணீரில் இருந்து காப்பாற்றி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவன் முகமது செபீக் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

இந்த சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் குளத்தில் வேறு சிறுவர்கள் தவறி விழுந்தார்களா என்று சிறிது நேரம் தேடி பார்த்துவிட்டு சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் தற்போதுதான் ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து அங்கு ஏராளமானோர் மீன் பிடித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த குளத்தை சுற்றிலும் வேலி அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story