மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் பிணமாக மிதந்தசேலம் தொழிலாளர்கள் + "||" + Mysteriously Floating dead Salem workers

மர்மமான முறையில் பிணமாக மிதந்தசேலம் தொழிலாளர்கள்

மர்மமான முறையில் பிணமாக மிதந்தசேலம் தொழிலாளர்கள்
ஆந்திர ஏரியில் மர்மமான முறையில் பிணமாக மிதந்த 5 பேரும் சேலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது.
பெத்தநாயக்கன்பாளையம்,

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடத்தில் உள்ள மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று முன்தினம் 5 பேரின் உடல்கள் மிதப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் உடனடியாக ஒண்டிமிட்டா போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் ஒண்டிமிட்டா ஏரிக்கு விரைந்து சென்றனர். அங்கு 5 ஆண்களின் உடல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவற்றை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒண்டிமிட்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


மர்மமான முறையில் பிணமாக கிடந்தவர்கள் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிணமாக மிதந்தவர்கள் அடையாளம் தெரிந்தது. அவர்கள் 5 பேரும் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கருமந்துறை அருகே உள்ள பெரியகல்வராயன் மலை கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

1. சி.முருகேசன் (வயது 45), அடியானூர், கிராங்காடு. இவருக்கு திருமணமாகி உண்ணாமலை என்ற மனைவியும், பழனியம்மாள், மீனா, ரோஜா ஆகிய மகள்களும் உள்ளனர். 2. ஜெயராஜ் (25), கிராங்காடு. இவருக்கு கரியா என்ற மனைவியும், வனிதா என்று 3 வயது மகளும், தினேஷ் என்ற 5 மாத கைக்குழந்தையும் உள்ளனர். 3. ஏ.முருகேசன் (42), கிராங்காடு. இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், மணிகண்டன், அசோக் என்ற 2 மகன்களும், ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கிறார்கள்.

4. கருப்பண்ணன் (23), ஆவாரை. இவருக்கு திருமணம் ஆகவில்லை. தந்தை பொன்னுசாமி, தாய் பார்வதி மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். 5. சின்னபையன் (40), கிராங்காடு. இவருக்கு திருமணம் ஆகி கண்ணம்மாள் என்ற மனைவியும், சந்தோஷ், சதீஷ், சிவநேசன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இறந்த 5 பேரும் கூலித்தொழிலாளர்கள் ஆவார்கள்.

பெரியகல்வராயன் மலை கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களை புரோக்கர்கள் சிலர் வேலைக்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கம். குறிப்பாக கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு பகுதிகளுக்கு வேலைக்கு அழைத்து செல்வார்கள். இங்குள்ள கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் பெரும்பாலும் கிராமத்தில் உள்ள வீடுகள் பூட்டியே கிடக்கும்.

தற்போது பிணமாக கிடந்த 5 பேரும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு புரோக்கர்கள் வேலைக்கு அழைத்து சென்று உள்ளனர். பண ஆசை காட்டி அவர்களை செம்மரக்கட்டைகளை கடத்த பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மலைக்கிராமங்களை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்கள் வீடுகளை தவிர மற்ற வீடுகளில் யாரும் இல்லாததால் பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக கிராமங்களின் உள்ள தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

எங்களது கிராமத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். எங்களை புரோக்கர்கள் சிலர் நேரடியாக வந்து அணுகி, கூலி பேசி வேலைக்கு அழைத்து செல்வார்கள். வேலைக்கு சென்றால் திரும்பி வருவதற்கு 2 முதல் 3 மாதங்கள் ஆகி விடும். இறந்த 5 பேரையும், புரோக்கர்கள் சிலர் கேரளாவில் வேலை எனக்கூறி அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் எப்படி ஆந்திராவுக்கு சென்றார்கள்? அவர்களை யார் அழைத்து சென்றார்கள்? என எதுவும் தெரியவில்லை.

5 பேரும் எப்படி இறந்தார்கள் என்பதும் தெரியாதது எங்களை மேலும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. வேலைக்கு சென்றவர்கள் திரும்பி வருவார்கள் என்று ஆவலுடன் காத்திருந்த எங்களுக்கு இந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த தொழிலாளி ஜெயராஜ் என்பவரின் மனைவி கரியா கூறும்போது, எனது கணவரின் இதயத்தில் ஓட்டை உள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டது. இதற்காக வேலைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறிச்சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. ஆனால் அவர் இறந்த செய்தி தான் வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இனி எனது குழந்தைகளை எப்படி வளர்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

ஆந்திராவில் உள்ள ஒண்டிமிட்டா மலைப்பகுதியில் செம்மரங்கள் அதிகமாக உள்ளன. செம்மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வனத்துறையினரின் ரோந்தும் தீவிரமாக உள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் 5 பேரும் புரோக்கர்களால் செம்மரக்கட்டை கடத்தலுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரவு நேரத்தில் வனத்துறையினரிடம் சிக்காமல் இருக்க அவர்கள் தப்பிக்க முயன்று ஓடியபோது ஏரியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என ஆந்திர வனத்துறையினர் கருதுகின்றனர்.

மேலும் தொழிலாளர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு, அதனால் அவர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டு உடலை ஏரியில் வீசி விட்டு சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார், வனத்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.