காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க.வை குறை கூற தி.மு.க.விற்கு தகுதி இல்லை - ஓ.பன்னீர் செல்வம் பேட்டி


காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க.வை குறை கூற தி.மு.க.விற்கு தகுதி இல்லை - ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2018 5:00 AM IST (Updated: 20 Feb 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க.வை குறை கூற தி.மு.க.விற்கு தகுதி இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

மதுரை,

மதுரையில் நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தல்லாகுளத்தில் உள்ள மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று சசிகலா மற்றும் கட்சியினர் வற்புறுத்தினர். ஆனால் இதற்கு நான் மறுத்தேன். அப்போது அவர்கள், நீங்கள் பொறுப்பேற்றால் தான் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என்றனர். எனவே அவர்கள் கட்டாயப்படுத்தியதால் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றேன். தொடர்ந்து எனது பணிகளை சிறப்பாக செய்தேன்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். அவரும் முழு ஒத்துழைப்பு தந்தார். இதன்காரணமாக தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இது போன்ற நடவடிக்கையால் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனை பொறுக்க முடியாமல் சசிகலா, தினகரன் ஆகியோர் என்னை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். அதனால் தான் நான் முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகினேன். தினகரன் ஞாபக சக்தி குறைந்தவர். எனவே அவருக்கு இதனை ஞாபகப்படுத்துகிறேன்.

மத்தியில் தி.மு.க.-காங் கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று ஜெயலலிதா பல முறை வற்புறுத்தினார். ஆனால் தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று சட்ட போராட்டம் நடத்தி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தவர் ஜெயலலிதா.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதற்கு காரணம் ஜெயலலிதா நடத்திய சட்ட போராட்டங்கள் தான். காவிரி பிரச்சினையில் அ.தி. மு.க. அரசை குறை கூற தி.மு.க.விற்கு எந்த தகுதியும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள், “நீங்கள் முதல்-அமைச்சராக இருந்த போது சசிகலா உங்களை தற்கொலைக்கு தூண்டினாரா?“ என்று கேட்டனர். அதற்கு அவர், “இந்த கேள்வியே தவறு. எனது இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் தற்கொலை செய்யும் சூழ்நிலைக்கு சென்று இருப்பார்“ என்று தான் கூறினேன். தொடர்ந்து அவரிடம், கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு, “தேர்தல் வரட்டும் பார்க்கலாம்“ என்றார்.

பின்னர் மதுரை விமான நிலையம் சென்ற பன்னீர் செல்வம், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்கள் கேட்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இதனை தெரிந்து கொண்டு மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளார். இதை அவர் அரசியல் ஆதாயத்துக்காக செய்கிறார். தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு ஆட்சியை கலைக்க முயற்சி செய்தார். அந்த சமயத்தில் நான் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து இது குறித்து கூறினேன். அப்போது அவர் நல்ல எண்ணத்தில் அ.தி.மு.க. அணிகள் இணைந்து செயல்படுவது நல்லது என்றார். எந்த பிரச்சினையாக இருந்தாலும், நானும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story