நீர்வரத்து குறைந்த நிலையில் வைகை அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு


நீர்வரத்து குறைந்த நிலையில் வைகை அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 19 Feb 2018 10:00 PM GMT (Updated: 19 Feb 2018 7:17 PM GMT)

வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில், அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மதுரைக்கு கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 71 அடி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை வடகிழக்கு பருவமழையின் மூலம் ஈடுசெய்யலாம் என்று பொதுப்பணித்துறையினர் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால் வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. இதனையடுத்து வைகை பாசனப்பகுதிகளில் முறை பாசனம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மட்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தால் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 39 அடியாக குறைந்தது. அணையில் இருக்கும் தண்ணீரை கோடைகால குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மதுரை மாவட்ட விவசாயிகள் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வைகை அணையில் இருந்து மீண்டும் வினாடிக்கு 960 கனஅடி வீதம் பாசனத்திற்காக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் வைகை அணை நீர்மட்டம் 3½ அடி குறைந்து, தற்போது 35.33 அடியாக உள்ளது. தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் குடிநீருக்காக வைகை அணையை நம்பியுள்ள மதுரை நகர்ப்பகுதி மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டப்பகுதிகளில் வரும் கோடை காலத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, வைகை அணையின் நீர்மட்டம் 35.33 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 39 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 626 மில்லியன் கனஅடியாக காணப்பட்டது.

Next Story