மாவட்ட செய்திகள்

போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி விழுப்புரத்தில் கைது + "||" + Police arrested Rowdy at Villupuram

போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி விழுப்புரத்தில் கைது

போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி விழுப்புரத்தில் கைது
போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வாணியர் தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் வரதராஜ் என்கிற கைப்பிள்ளை ராஜ்(வயது 27). பிரபல ரவுடியான இவர் மீது விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வரதராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்திருந்தது. அதன்அடிப்படையில் விக்கிரவாண்டி போலீசார் தலைமறைவாக இருந்த வரதராஜை தேடி வந்தனர்.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்கிரவாண்டி போலீசார் பாப்பனப்பட்டு அழுக்கு பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வரதராஜை போலீசார் பிடிக்க முயன்றனர். அந்த சமயத்தில் வரதராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 2 போலீஸ்காரர்களை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் வீரன் கோவில் அருகே லாரி டிரைவர் ஒருவரிடமும் பணம் பறித்த வரதராஜ், பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, அதற்கான தொகையை கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு நேற்று புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து வரதராஜை தேடி வந்தனர். அப்போது அவர் ஜானகிபுரம் அங்காளம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, வரதராஜை கைது செய்தனர். பின்னர் அவர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.