மாவட்ட செய்திகள்

கூடலூரில் கடமானை வேட்டையாடிய 2 பேர் கைது + "||" + Two people arrested for hunting dear

கூடலூரில் கடமானை வேட்டையாடிய 2 பேர் கைது

கூடலூரில் கடமானை வேட்டையாடிய 2 பேர் கைது
கூடலூரில் கடமானை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய காவலாளியை தேடி வருகின்றனர்.
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தருமகிரி பகுதியில் ஒரு தேயிலை தோட்டத்தில் கடமான் வேட்டையாடப்பட்டுள்ளதாக கூடலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனச்சரகர் ராமகிருஷ்ணன், வனவர்கள் மான்பன், ரவி, வன காப்பாளர்கள் பிரகாஷ், கிருபானந்தகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் தருமகிரி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தேயிலை தோட்டத்தில் உள்ள வீட்டில் வனத்துறையினர் நுழைந்தனர்.


அப்போது வீட்டுக்குள் துப்பாக்கி ஒன்று இருந்தது. அதை வனத்துறையினர் பறிமுதல் செய்து வீட்டில் இருந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டின் பின்புறம் நிலத்தின் அடியில் கட்டப்பட்டுள்ள தொட்டிக்குள் கடமானின் உடற்பாகங்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. இதையொட்டி சிமெண்டு தளம் கொண்ட தொட்டியின் மூடியை வனத்துறையினர் அகற்றினர். பின்னர் தொட்டிக்குள் கிடந்த கடமானின் உடற்பாகங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

இதனிடையே வனத்துறையினர் வருவதை அறிந்த தேயிலை தோட்ட காவலாளி அங்கிருந்து தலைமறைவானது தெரிய வந்தது. பின்னர் கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த ஜார்ஜ் மகன் ரோய் என்ற ரோயச்சன் (வயது 44), தருமகிரி பகுதியை சேர்ந்த உலகண்ணன் மகன் ரெஜி (44), இடுக்கி பகுதியை சேர்ந்த தோட்ட காவலாளி சுரேஷ் ஆகிய 3 பேர் மீது கூடலூர் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ரோயச்சன், ரெஜி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இது குறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறிய தாவது:-

தருமகிரி பகுதியில் கள்ள துப்பாக்கி மூலம் கடமான் வேட்டையாடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் திடீர் சோதனை நடத்தப்பட்டதில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி, கடமானின் உடற்பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கிக்கு உந்து சக்தி மிக குறைவு.

இதனால் அந்த துப்பாக்கியால் கடமானை வேட்டையாட முடியாது. அதற்கு பதிலாக கள்ள துப்பாக்கி மூலம் கடமான் வேட்டையாடியது தெரிய வந்துள்ளது. இருப்பினும் தலைமறைவாக உள்ள தோட்ட காவலாளி சுரேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்திய பின்னரே முழு விவரம் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.