கவர்னர் வருகை எதிரொலி திருச்சியில் புதுப்பொலிவு பெற்ற சாலைகள்


கவர்னர் வருகை எதிரொலி திருச்சியில் புதுப்பொலிவு பெற்ற சாலைகள்
x
தினத்தந்தி 19 Feb 2018 10:45 PM GMT (Updated: 19 Feb 2018 7:48 PM GMT)

கவர்னர் வருகையையொட்டி திருச்சியில் சாலைகள் புதுப்பொலிவு பெற்றன.

திருச்சி,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது. விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதற்காக கவர்னர் இன்று (செவ்வாய்கிழமை) இரவு 9 மணிக்கு திருச்சி வருகிறார். அவரை கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். இரவு சுற்றுலா மாளிகையில் கவர்னர் தங்குகிறார்.

தொடர்ந்து நாளை(புதன்கிழமை) காலை மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மதியம் மீண்டும் சுற்றுலா மாளிகைக்கு வரும் கவர்னர் அங்கு பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார். மாலை 4.30 மணிக்கு சமயபுரம் கோவிலுக்கு செல்லும் அவர், தொடர்ந்து மாலை 6 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

பொதுவாக முதல்-அமைச்சரோ அல்லது பிரதமரோ மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களோ வந்தால் அவர்களை வரவேற்கும் விதமாகவும், நகரின் முக்கிய சாலைகள் குப்பைக்கள் இன்றி தூய்மைப்படுத்தப்படும். முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலைகள் சீரமைக்கப் படும்.

இந்தநிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, அங்கு திடீர் ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது சாலைகள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? மற்றும் அதிகாரிகள் ஒழுங்காக பணி செய்கிறார்களா? எனவும் ஆய்வு செய்கிறார். கவர்னரின் இத்தகைய நடவடிக்கைக்கு தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கவர்னர் வரும்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் இன்று இரவு திருச்சிக்கு வருகிறார். நாளை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர் திடீர் ஆய்வு மேற்கொள்ளவும் வாய்ப்பு இருப்பதால் திருச்சி மாநகரில் பல்வேறு சாலைகள் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. சாலைகளை பிரிக்கும் மைய தடுப்புகட்டைகளில்(சென்டர் மீடியன்) வர்ணம் பூசப்பட்டதோடு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சாலைகளில் தேங்கும் குப்பைகள் மற்றும் மணலை உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள். குறிப்பாக கவர்னர் வந்து செல்லும் விமானநிலைய சாலை, டி.வி.எஸ்.டோல்கேட், தில்லைநகர், மலைக்கோட்டை, கண்டோன்மெண்ட் பகுதி சாலைகள் பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளன.

திருச்சிக்கு கவர்னர் வரும்போது திடீர் ஆய்வு மேற்கொண்டால் குறைகள் எதுவும் இருக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் குண்டும், குழியுமாக இருந்த சாலைகளுக்கெல்லாம் விமோசனம் கிடைத்துள்ளது. ஒரே வாரத்தில் இந்த சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டும், சீரமைக்கப்பட்டும் புதுப்பொலிவுடன் பளிச்சென காட்சி அளிக்கிறது.

தூய்மை இந்தியா திட்டத்தில் திருச்சி மாநகராட்சி முதலிடம் பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக கடந்த சில மாதங்களாக மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் துப்புரவு பணியாளர்கள் சென்று வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கி செல்கிறார்கள்.

இந்தநிலையில் கவர்னரின் திருச்சி வருகையையொட்டி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பணிகளை மேற்கொண்டு வந்த துப்புரவு பணியாளர்களுக்கு கவர்னர் வரும் வழித்தடங்களை தூய்மையாக பராமரிக்கும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் துப்புரவு பணிகளையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்ட உயர் பதவிகளில் உள்ளவர்கள் வரும்போது மட்டும் இத்தகைய பணிகளை மேற்கொள்ளாமல் தொடர்ந்து திருச்சி மாநகரை இதேபோல் அழகுடன் இருக்க பணியாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாகும். 

Next Story