மாவட்ட செய்திகள்

ஆன்லைன் பத்திரப்பதிவில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து போராட்டம் + "||" + Struggle against delay in online securities

ஆன்லைன் பத்திரப்பதிவில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து போராட்டம்

ஆன்லைன் பத்திரப்பதிவில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து போராட்டம்
ஆன்லைன் பத்திரப்பதிவில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து கோவையில் பத்திர எழுத்தர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
கோவை,

தமிழகம் முழுவதும் கடந்த 12-ந் தேதி முதல் பத்திரப்பதிவை ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன்படி ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு நடைபெறு கிறது. ஆனால் இதில், பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், பத்திரப்பதிவில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த குறைபாட்டை தவிர்க்கவும், பத்திரப்பதிவை எளிமைப்படுத்தவும் கோரி தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


அதன்படி கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோர் சங்கம் சார்பில்வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத் தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில், செயலாளர் மகேஷ்குமார், பொருளாளர் விஜயராகவன் மற்றும் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆன்லைனில் பத்திரப்பதிவு திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இது குறித்து சங்க தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 927 பத்திர எழுத்தர்கள் உள்ளனர். அவர்கள் 18 இடங்களில் போராட்டம் நடத்தினர். ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்ய காலதாமதம் ஆகிறது. இதனால் எழுத்தர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையில்லாத காலவிரயம் ஆகிறது. எனவே ஆன்லைன் முறையை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய முறையே கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவையை அடுத்த மருதமலையில் உள்ள பத்திர எழுத்தர்கள் நேற்று அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். இது குறித்து தமிழ்நாடு பத்திரப்பதிவு எழுத்தர்கள் சங்க வடவள்ளி கிளை தலை வர் ராஜன், செயலாளர் அமிர்தம் மற்றும் அமர்சிங் ஆகியோர் கூறியதாவது:-

ஆன்லைன் பத்திரப்பதிவை எளிமைப்படுத்த வேண்டும். முன்பு அடமான பத்திரம் 99 வருடங்களுக்கு பதிய முடியும். ஆனால் தற்போது ஒரு வருடத்திற்கு மட்டுமே பதிய முடிகிறது. இதனால் லீஸ் பத்திரங்கள் பதிவதில் சிரமம் ஏற்படுகிறது. மருதமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு 50-க்கும் குறையாமல் பத்திரப்பதிவு நடைபெறும். ஆனால் தற்போது 10 முதல் 15 பத்திரப்பதிவுகளே நடைபெறுகிறது. எனவே பத்திரப்பதிவில் உள்ள குறைபாட்டை களையக்கோரி பத்திர எழுத்தர்கள் அனைவரும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெரியநாயக்கன்பாளையம், சரவணம்பட்டி, மணியக்காரம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சார்- பதிவாளர் அலுவலகங்களை முற்றுகையிட்டு பத்திரம், நகல் எழுதுவோர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.