பொதுத்தேர்வு வினாத்தாள் அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


பொதுத்தேர்வு வினாத்தாள் அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 20 Feb 2018 3:30 AM IST (Updated: 20 Feb 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பு 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக ள் வருகிற மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளது. இதில் பிளஸ்-2 தேர்வு வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 2-வது வாரத்திலும், 3-வது வாரம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் அடுத்தடுத்து தொடங்கி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் துறை மற்றும் பள்ளிக்கல்வி துறையினர் செய்து வருகின்றனர். தேர்வு மையங்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் பட்டியல் தயாரித்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 405 பேர் எழுதுகின்றனர். இதில் பிளஸ்-2 தேர்வை 16 ஆயிரத்து 366 மாணவர்கள், 21 ஆயிரத்து 597 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 964 பேர் எழுதுகின்றனர்.

பிளஸ்-1 தேர்வை 17 ஆயிரத்து 374 மாணவர்கள், 22 ஆயிரத்து 85 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 963 பேரும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 22 ஆயிரத்து 151 மாணவர்கள், 21 ஆயிரத்து 832 மாணவிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 983 பேரும் எழுதுகின்றனர்.

இவர்கள் தேர்வு எழுதுவதற்கு பிளஸ்-2, பிளஸ்-1 தேர்வுகளுக்கு தலா 123 தேர்வு மையங்களும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு 165 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர வினாத்தாள்கள், விடைத்தாள்களை கொண்டு செல்லவும், எடுத்து வரவும் 10 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் தேர்வுக்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம் தலைமையில் அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான மொழிப்பாட வினாத்தாள்கள் கடந்த 4 நாட்களாக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையொட்டி நெல்லை மாவட்டத்துக்கும் வினாத்தாள்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன. அவை நெல்லையில் அரசு மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டையில் சாராள்தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 10 மையங்களில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டு அறைகள் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைகள் முன்பு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வினாத்தாள் இருக்கும் அறை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இங்கிருந்து தேர்வு நடைபெறும் தேதிகளில் வினாத்தாள்கள் அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மற்ற பாடங்களுக்கான வினாத்தாள்கள் அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டு, தேர்வு மையங்களுக்கு தேவையான நேரத்தில் அனுப்பி வைக்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு வினாத்தாள் பின்னர் கொண்டு வரப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story