திருமண கோஷ்டியினர் வேன் கவிழ்ந்தது; தொழிலாளி பலி


திருமண கோஷ்டியினர் வேன் கவிழ்ந்தது; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 Feb 2018 11:45 PM GMT (Updated: 19 Feb 2018 8:45 PM GMT)

சங்கரன்கோவில் அருகே கல்லூரி பஸ்சும், திருமண கோஷ்டியினர் சென்ற வேனும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவ-மாணவிகள் உள்பட 35 பேர் காயம் அடைந்தனர்.

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மீன்துள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையாவின் மகள் கலையரசி (வயது 23). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த போலீஸ்காரர் பாண்டியராஜூ என்பவருக்கும் நேற்று காலை தளவாய்புரத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மீன்துள்ளி கிராமத்தை சேர்ந்த மணமகளின் தந்தை முத்தையா உள்ளிட்ட உறவினர்கள் நேற்று காலை வேனில் தளவாய்புரத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.

அதே கிராமத்தை சேர்ந்த வேன் உரிமையாளர் குழந்தைசாமி (42) என்பவர் வேனை ஓட்டினார். சங்கரன்கோவில் அருகே உள்ள மலையான்குளம் அருகில் சென்றபோது, சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த தனியார் கல்லூரி பஸ்சும், வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பஸ் மோதிய வேகத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்தது. உள்ளே இருந்தவர்கள் வேனில் இருந்து வெளியே வரமுடியாமல் “அய்யோ, அம்மா“ என்று அலறினர். இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்களும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர்.

இதுபற்றி சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் சங்கரன்கோவில், தேவர்குளம், பனவடலிசத்திரம், குருவிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள், தனியார் ஆம்புலன்ஸ்கள் அங்கு விரைந்து வந்தன. மேலும், சங்கரன்கோவில் டவுன் போலீசார், குருவிகுளம் போலீசாரும் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டார்கள்.

விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து சங்கரன்கோவில்- கழுகுமலை சாலையில் ஆம்புலன்சுகள் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி ஏராளமான பொதுமக்கள் சாலையில் திரண்டனர்.

விபத்தில் லேசான காயம் அடைந்த கல்லூரி மாணவர்கள் பாலகணேஷ் (19), கோபி (19), அபிஷேக் (19), மாணவிகள் தமிழ்செல்வி (19), கரீபா (19) ஆகியோர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

ஆவுடையாள்புரத்தை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி ஜோதி (30), மீன்துள்ளி கிராமத்தை சேர்ந்த வேன் உரிமையாளர் குழந்தைச்சாமி (42) துரைச்சாமி மனைவி கலைச்செல்வி(30), தங்கப்பாண்டி மனைவி பேச்சியம்மாள் (42), மலைச்சாமி மனைவி இன்னொரு பேச்சியம்மாள் (35), முத்துப்பாண்டி மனைவி செல்லத்தாய் (40), மணி மனைவி அய்யம்மாள் (40), பிச்சையா மனைவி அய்யம்மாள் (60) உள்ளிட்டோர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படுகாயமடைந்த சிந்தாமணி மகன் கருப்பசாமி (53), தங்கப்பாண்டி மகள் அனுசியா (6), கருப்பசாமி மகன் முத்துப்பாண்டி (48), பூலி மகன் கருப்பசாமி (48), கருப்பசாமி மனைவி சுப்பம்மாள் (58), முத்துகருப்பன் மனைவி கருப்பாயி (62), ஜெயப்பிரகாசம் மனைவி மணிமேகலை (30), பேச்சிமுத்து மனைவி முத்தம்மாள் (60), கல்லூரி பஸ் டிரைவர் ஆலமநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி மகன் சேகர் (30) உள்ளிட்ட 10 பேர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 13 பேர் லேசான காயங் களுடன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

வேனின் உள்ளே மாட்டிக்கொண்ட அன்னபூரணபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான துரைச்சாமி (32) என்பவரை பொக்லைன் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி மீட்டனர். பின்னர் துரைச்சாமியை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், துரைச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு கூடியிருந்த அவரது உறவினர்கள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. விபத்து குறித்து குருவிகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story