லாரி மீது மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி


லாரி மீது மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 20 Feb 2018 3:45 AM IST (Updated: 20 Feb 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

சின்னதாராபுரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

க.பரமத்தி,

வேலாயுதம்பாளையம் நந்தவனத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் கார்த்திக்கேயன்(வயது 27). அதே பகுதியை சேர்ந்த மணி மகன் ரஞ்சித்குமார்(30), செல்வராஜ் மகன் மணிவண்ணன்(30). இவர்கள் 3 பேரும் நேற்று இரவு சின்னதாராபுரத்தில் இருந்து வேலாயுதம்பாளையத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இதில் கார்த்திக்கேயனும், ரஞ்சித்குமாரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். மணிவண்ணன் தனியாக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். க.பரமத்தி- சின்னதாராபுரம் சாலையில் சென்று கொண்டு இருந்த போது பூலான்காளிவலசு என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்பியுள்ளனர். அப்போது எதிரே வந்த லாரி மீது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதின.

இதில் படுகாயம் அடைந்த கார்த்திக்கேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் ரஞ்சித்குமார் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மணிவண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னதாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பூலான்காளிவலசு என்ற இடத்தில் உள்ள வளைவில் தொடர்ந்து அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட இடத்தில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story