பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் லட்சுமிபிரியா வழங்கினார்


பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் லட்சுமிபிரியா வழங்கினார்
x
தினத்தந்தி 20 Feb 2018 4:15 AM IST (Updated: 20 Feb 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.8½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லட்சுமிபிரியா வழங்கினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, அம்மா இருசக்கர வாகனம், திருமண நிதியுதவி திட்டம், தொகுப்பு வீடுகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 320 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், கலப்பு திருமண நிதி உதவி திட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் ஏழை பெண்ணின் திருமணத்திற்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டம் பெற்ற 5 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையினையும், தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் 20 கிராம் தங்க நாணயங்களையும், பட்டம் அல்லாதோர் 12 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்திற்கான காசோலையினையும், தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் 48 கிராம் தங்க நாணயங்களையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு செயற்கை உபகரணம் உள்பட மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 65 ஆயிரத்து 958 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லட்சுமிபிரியா வழங்கினார்.

பின்னர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல், அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று இம்மனுக் களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட சமூக அலுவலர் பூங்குழலி, துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புதிட்டம்) பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story