திட்டமிட்டபடி இன்று கடையடைப்பு போராட்டம்; வணிகர்கள் கூட்டமைப்பு உறுதி


திட்டமிட்டபடி இன்று கடையடைப்பு போராட்டம்; வணிகர்கள் கூட்டமைப்பு உறுதி
x
தினத்தந்தி 20 Feb 2018 4:00 AM IST (Updated: 20 Feb 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இன்று திட்டமிட்டபடி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

குடிநீர், வீடு, மின்சாரம், போக்குவரத்து, கட்டிடம், சொத்து, தொழில், வணிக உரிம கட்டணம் ஆகியவற்றின் மீதான வரிகளை புதுவை அரசு பல மடங்கு உயர்த்தி உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல் புதியதாக குப்பை அள்ளக்கூட வரி விதித்து புதுவை மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இது வியாபாரிகள் மற்றும் மக்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.

இந்த வரி உயர்வுக்கு அமைச்சரவையிலோ சட்டசபையிலோ ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே அந்த வரி உயர்வு சட்டவிரோதமானது. அரசு மறைமுகமாக, குறுக்கு வழியில் திடீரென்று வரிகளை உயர்த்தி இருப்பது நியாயமற்றது. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பிற்கு பின் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. அதனால் வணிகர்களும், பொதுமக்களும் மிகுந்த பாதிப்பினை சந்தித்து வரும் நிலையில் அரசின் பல்வேறு வரி உயர்வு மக்கள் விரோதப்போக்காக அமைந்துள்ளது.

இதுதொடர்பாக அரசிடம் மனு கொடுத்தும், அணுகியும் பயன் இல்லை. அரசு தரப்பு அலட்சியம் காட்டியதால் மக்கள் நலன் கருதி இன்று (செவ்வாய்க்கிழமை) கடையடைப்பு போராட்டத்துக்கு புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் சிலரை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சில வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

மக்களிடம் சமூக தணிக்கை செய்யாமல் தன்னிச்சையாக உயர்த்தப்பட்ட வரிகளை முற்றிலும் ரத்துசெய்யும் வரை போராட்டம் தொடரும். எனவே கடையடைப்பு திட்டமிட்டபடி நடைபெறும். அந்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை. இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆதரவு தந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story