தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.7.60 லட்சம் மோசடி செய்தவர் கைது


தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.7.60 லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2018 4:30 AM IST (Updated: 20 Feb 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், மோகனூர் இந்திரா நகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 51). நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2015-ம் ஆண்டு கோவை சண்முகா நகரில் வசித்து வந்த டேனியல் சார்லஸ் (55) என்பவர், தனது வீட்டிற்கு வந்து தான் நடத்தி வரும் நிறுவனத்தின் மூலம் பல நபர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தந்து உள்ளதாக கூறினார்.

மேலும் தன்னிடமும் ரூ.7½ லட்சம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி, கடந்த 2016-ம் ஆண்டு ரூ.7 லட்சத்து 60 ஆயிரத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இதுவரை வெளிநாட்டில் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி மோசடி செய்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், டேனியல் சார்லஸ் இதேபோன்று பல நபர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததும், பணம் கொடுத்த நபர்கள் திரும்ப கேட்டதால், தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதும் தெரியவந்தது.

தற்போது கன்னியாகுமரியில் இருப்பதை அறிந்த குற்றப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று டேனியல் சார்லஸை கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு தமயந்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, டேனியல் சார்லஸ் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுபோன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறும் புரோக்கர்களை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.


Next Story