பள்ளி மாணவர்கள்-பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


பள்ளி மாணவர்கள்-பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2018 12:25 AM GMT (Updated: 20 Feb 2018 12:25 AM GMT)

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

சென்னை மதுரவாயல் தாலுகா திருவேற்காடு பெரியார் நகர், செல்வலட்சுமி நகரை சேர்ந்த திரளான பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

நாங்கள் மேற்கண்ட பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, மின்இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், எரிவாயு இணைப்பு என பல்வேறு ஆவணங்களை வைத்து முறையாக அனுபவித்து வருகிறோம்.

நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வேண்டி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எங்களுக்கு இதுவரையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது அதிகாரிகள், நாங்கள் குடியிருக்கும் இடம் நீர்நிலைப்பகுதிகளில் உள்ளது எனவும், அதனை அகற்றக்கோரியும் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள், எங்களது வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், எங்களுக்கு பட்டா வழங்கக்கோரியும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அஸ்வின்குமார் மற்றும் நிர்வாகிகளுடன் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story