ராணுவவீரர் ஆட்சேர்ப்பு முகாம்


ராணுவவீரர் ஆட்சேர்ப்பு முகாம்
x
தினத்தந்தி 20 Feb 2018 12:52 PM IST (Updated: 20 Feb 2018 12:52 PM IST)
t-max-icont-min-icon

ராணுவத்தில் படைவீரர் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

ராணுவத்தின் சென்னை மண்டல தலைமை அலுவலகம், படைவீரர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். ராணுவவீரர், டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர், பொதுப் பணி, கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவுகளில் இவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராகவும், திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரராகவும் இருக்க வேண்டும். இதற்கான ஆட்சேர்ப்பு முகாம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 10–4–2018 முதல் 23–4–2018 வரை நடைபெறும்.

படைவீரர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 17½ வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு 21 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 1–10–2018–ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 

கல்வித்தகுதி:

பிளஸ்–2 படிப்பில் அறிவியல் பாடம் படித்தவர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஆகியோருக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருப்பது அவசியம். உடல்தகுதி மருத்துவ பரிசோதனை மூலம் சோதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

சான்றிதழ் சரிபார்த்தல், உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24–2–2018–ந் தேதி இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்குகிறது. 25–3–2018–ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்  www.joinindianarmy.nic.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Next Story