மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Feb 2018 9:45 PM GMT (Updated: 20 Feb 2018 7:49 PM GMT)

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் பட்டியலை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். கோவில் வளாகத்தில் 115 கடைகள் இருப்பதாக சொல்கின்றனர். உண்மையில் 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் விற்கப்படுகின்றன.

எனவே மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும், கோவிலை புனரமைத்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிடவும் தொல்லியல் துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கவும், தீ விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை கடந்த 9-ந்தேதி விசாரித்த ஐகோர்ட்டு, மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பார்வையாளர்கள், பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடைவிதித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் நீலமேகம், இந்த வழக்கில் ஏற்கனவே கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. கோவில் பாதுகாப்புக்கான உயர்மட்டக்குழுவில் தீ தடுப்புப்பிரிவுக்கான உயர் அதிகாரிகள் யாரும் சேர்க்கப்படவில்லை. பின்னர் எப்படி கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று வாதாடினார்.

இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு 2 வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து நீதிபதிகள், “2 வாரங்களில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்“ என்றனர். மேலும், மீனாட்சி அம்மன் கோவிலில் நவீன ஸ்கேனர்களை வாங்குவது குறித்தும், நவீன தீயணைப்பு கருவிகளை பொருத்துவது குறித்தும் 2 வாரங்களில் பதிலளிக்கவும் அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் கோவிலை சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக கட்டிடங்கள் கட்டப்படுவதைத் தடுக்க தொடர்ந்து கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் பட்டியலை தாக்கல் செய்யவும் மாநகராட்சி தரப்பினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story