உசிலம்பட்டி அருகே 90 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது


உசிலம்பட்டி அருகே 90 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2018 3:45 AM IST (Updated: 21 Feb 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே 90 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து போலீசார் அவ்வப்போது சிலரை கைது செய்தாலும் அப்பகுதியில் கஞ்சா தொழிலை ஒழிக்க முடிய வில்லை.

இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள கல்யாணிப்பட்டி விலக்கில் உத்தப்பநாயக்கனுார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிங்கசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை மறித்து சோதனை செய்தனர். இதில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் 30 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் உசிலம்பட்டி எஸ்.ஓ.ஆர்.நகரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் புதுராஜா (வயது 39), திண்டுக்கல் மாவட்டம், தேவரப்பன்பட்டியைச் சேர்ந்த முத்துமாயி மகன் ரவிச்சந்திரன் (47) என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் உசிலம்பட்டி அருகே உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கணேஷ் என்ற குண்டு கணேசன் என்பவருடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து 90 கிலோ கஞ்சாவை வாங்கி வந்துள்ளனர்.

அதனை அணைப்பட்டி அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். அதிலிருந்து 30 கிலோ கஞ்சாவை மட்டும் மோட்டார்சைக்கிளில் எடுத்துக் கொண்டு வந்தபோது தான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.மேலும் கஞ்சாவை மறைத்து வைத்த இடத்தில் கணேசன் பாதுகாப்புக்காக இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அணைப்பட்டி பகுதிக்கு போலீசார் சென்றனர். அதற்குள் கணேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் மறைத்து வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 60 கிலோ கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கணேசனை தேடி வருகின்றனர்.

Next Story