கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருச்சி வந்தார்


கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருச்சி வந்தார்
x
தினத்தந்தி 21 Feb 2018 4:15 AM IST (Updated: 21 Feb 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திருச்சி வந்தார். இன்று அவர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி குறைகளையும் கேட்கிறார்.

திருச்சி,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து ஜெட் ஏர்வைஸ் விமானம் மூலம் நேற்று இரவு 9.05 மணிக்கு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர். வரவேற்பு முடிந்த பின்னர் கார் மூலம் கவர்னர் திருச்சி சுற்றுலா மாளிகைக்கு வந்து தங்கினார்.

இன்று (புதன்கிழமை) காலை 6.45 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமானசாமி கோவிலுக்கு செல்கிறார். மாணிக்க விநாயகர், தாயுமானவர், உச்சிப்பிள்ளையார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்கிறார். காலை 7.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். மூலவர் ரெங்கநாதர் மற்றும் தாயார் சன்னதிகளில் வழிபாடு செய்து விட்டு 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார். 9 மணிக்கு சுற்றுலா மாளிகையை அடைகிறார்.

காலை 9.45 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சரியாக 10 மணிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை அடைகிறார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இந்த விழாவில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர் விஞ்ஞானி கை.சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

பட்டமளிப்பு விழா முடிந்த பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீண்டும் சுற்றுலா மாளிகையை வந்தடைகிறார். அங்கு காலை 11.45 மணி முதல் மதியம் 1.45 மணி வரை திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டப்பணிகள் பற்றி கவர்னர் ஆய்வு நடத்துகிறார்.

மதிய உணவுக்கு பின்னர் சுற்றுலா மாளிகையில் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்குகிறார். 3.30 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் கவர்னர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கழிவறையை பார்வையிடுகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கண்காட்சியையும் திறந்து வைக்கிறார். கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்து விட்டு, கருமண்டபம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுரம் செயலாக்க மையத்தை பார்வையிடுகிறார்.

மாலை 4.35 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு 5.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்தை அடைகிறார். மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

கவர்னரின் திருச்சி வருகையால் திருச்சி நகரில் மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன் ரெயில் நிலையம், புதுக்கோட்டை சாலை, குட்ஷெட் மேம்பாலம் மற்றும் கருமண்டபம் பகுதியில் உள்ள சாலைகள் எல்லாம் சீரமைக்கப்பட்டு உள்ளன. தெருக்கள் எல்லாம் தூய்மைப்படுத்தப்பட்டு ‘பளிச்’ என காட்சி அளிக்கிறது.

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் காலை 9.30 மணி அளவில் திருச்சி ஜெயில் கார்னர் அருகில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கவர்னர் சாமி தரிசனம் செய்ய உள்ள 3 கோவில்கள், கோவிலுக்கு செல்லும் பாதைகள், தூய்மை இந்தியா திட்டப்பணிகளை பார்வையிடும் மத்திய பஸ் நிலையம் பகுதிகளிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர் சிவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை வருகிறார்.

Next Story