கம்பராயப்பெருமாள் கோவிலில் தேரின் பாதுகாப்பு வேலியை மீண்டும் சேதப்படுத்திய மர்ம நபர்கள்


கம்பராயப்பெருமாள் கோவிலில் தேரின் பாதுகாப்பு வேலியை மீண்டும் சேதப்படுத்திய மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 21 Feb 2018 3:00 AM IST (Updated: 21 Feb 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் உள்ள கம்பராயப்பெருமாள் கோவிலில் தேரின் பாதுகாப்பு வேலியை மர்ம நபர்கள் மீண்டும் சேதப்படுத்திவிட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கம்பம்,

கம்பத்தில் பிரசித்தி பெற்ற கம்பராயபெருமாள் கோவில் உள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான தேர் ஒன்று உள்ளது. இந்த தேர் நிறுத்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமித்து கடைகள் இருந்தன. இதனை அகற்றி தேரை பாதுகாக்க வேலி அமைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையினரிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் தேரை சுற்றியுள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கவும், பாதுகாப்புக்காகவும் கம்பி வேலி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி மர்ம நபர்கள் தேரை சுற்றி இருந்த கம்பி வேலியின் கல்தூண்களை சேதப்படுத்தினர். இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் சேதமடைந்த கல்தூண்களுக்கு பதிலாக புதிய கல்தூண் அமைத்து வேலி அமைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மர்ம நபர்கள் தேரை சுற்றியுள்ள பாதுகாப்பு வேலியை சேதப்படுத்தி விட்டனர். தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவத்தால் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், கோவில் தேரை சுற்றியுள்ள பாதுகாப்பு வேலியை மர்ம நபர்கள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கையும் தாமதமாக உள்ளது. இதனால் தேருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க இரவு நேரங்களில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில், தேரை சுற்றியுள்ள பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்றனர். 

Related Tags :
Next Story