புதுக்கோட்டை நகராட்சியில் புல் கட்டு விற்பனை


புதுக்கோட்டை நகராட்சியில் புல் கட்டு விற்பனை
x
தினத்தந்தி 21 Feb 2018 3:45 AM IST (Updated: 21 Feb 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் மூலம் நடைபெறும் பாசனத்தால் புதுக்கோட்டை நகராட்சியில் புல் கட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வருமானம் நகராட்சிக்கு கிடைக்கிறது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி, 39 வார்டு மருபனிரோடு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சிக்கு சொந்தமான 100 ஏக்கரில் புல் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த புல் பண்ணைக்கு புதுக்கோட்டை நகரின் அனைத்து பகுதியிலும் உள்ள கழிவுநீர் டி.வி.எஸ். கார்னர் வழியாக புல் பண்ணைக்கு வந்து சேர்கிறது. பின்னர் அங்கிருந்து கால்வாய்கள் அமைக்கப்பட்டு புல் பண்ணை முழுவதும் உள்ள புல்களுக்கு பாய்ச்சப்படுகிறது.

இந்த புல் பண்ணையில் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை புல் அறுவடை செய்யப்படுகிறது. இந்த பணியில் பெண்கள் உள்பட 15 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த புல் பண்ணையில் இருந்து தினமும் ஏராளமான புற்கள் அறுவடை செய்யப்படுகின்றன. மேலும் ஒரு புல் கட்டு ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காலையில் புல் பண்ணையில் அறுவடை செய்யப்பட்ட புற்கள் 9 மணி முதல் 12 மணி வரை புதுக்கோட்டை அண்ணாசிலை, ரெயில் நிலையம், மச்சுவாடி, புல் பண்ணை உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் காலையிலேயே நகராட்சிக்கு சொந்தமான புல்பண்ணைக்கு வந்து தங்களது கால்நடைகளுக்கு தேவையான புல் கட்டுகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் நகராட்சிக்கு சராசரியாக மாதம் ரூ.2½ லட்சம் வீதம் ஆண்டிற்கு ரூ.30 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.

Next Story