விழுப்புரத்தில் போலீஸ் அதிரடிப்படை வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


விழுப்புரத்தில் போலீஸ் அதிரடிப்படை வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Feb 2018 3:15 AM IST (Updated: 21 Feb 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் போலீஸ் அதிரடிப்படை வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் ஆவின் நிறுவனம் அருகில் வாகனங்களை பழுதுபார்க்கும் ஒர்க்‌ஷாப் உள்ளது. இங்கு அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த பெரும்பாலான வாகனங்கள் பழுது பார்ப்பதற்காக விடப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையின் அரசு வாகனங்கள் பழுது பார்ப்பதற்காக ஒர்க்‌ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த வாகனங்களை பழுது பார்க்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடன் பாதுகாப்புக்காக செல்லும் அதிரடிப்படையினரின் வாகனத்தின் என்ஜினை பழுது பார்க்கும் பணி நடைபெற்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் திடீரென என்ஜினில் இருந்து தீப்பொறி கிளம்பியது.

இந்த தீப்பொறி, வாகனத்தின் உட்புறத்தில் இருந்த இருக்கைகளில் பற்றி தீப்பிடித்து எரிந்தது. தீ மேலும் கொழுந்து விட்டு எரியவே அருகில் இருந்த தொழிலாளர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் முடியாததால் உடனே இதுபற்றி அவர்கள் விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து மேலும் மற்ற வாகனங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தி அணைத்தனர். இருப்பினும் வாகனத்தின் இருக்கைகள் மற்றும் மேல்பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.இதுபற்றிய தகவல் அறிந்ததும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாலுகா போலீசார் விரைந்து சென்று தீ விபத்தில் சேதமடைந்த அதிரடிப்படை வாகனத்தை பார்வையிட்டு தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.விழுப்புரத்தில் போலீஸ் அதிரடிப்படை வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story