தனியார் நிறுவன காவலாளி மர்ம சாவு


தனியார் நிறுவன காவலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 21 Feb 2018 3:45 AM IST (Updated: 21 Feb 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சூரமங்கலம் அருகே தனியார் நிறுவன காவலாளி மர்மமான முறையில் இறந்தார்.

சூரமங்கலம்,

சேலம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது51). இவர், சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி உள்ள ஹாலோபிரிக்ஸ் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் பெரியசாமி, இரவு காவல் பணிக்காக அந்நிறுவனத்திற்கு சென்றார்.

இரவு வேளையில் அந்நிறுவனத்தில் பணிசெய்யும் தொழிலாளர்கள் பார்த்தபோது, அங்கு பெரியசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக தொழிலாளர்கள் பள்ளிப்பட்டியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பெரியசாமியின் மனைவி குணா மற்றும் அவரது உறவினர்கள் விரைந்து வந்து பெரியசாமி உடலை பெற்றுக்கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் பள்ளிப்பட்டிக்கு சென்றனர்.

அங்கு கோவில் திருவிழா நடந்து வந்ததால், ஊருக்குள் பிணத்தை கொண்டுவரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. இரவு முழுவதும் ஆம்புலன்சிலேயே பெரியசாமி உடலுடன் ஊருக்கு வெளியே காத்திருந்தனர். இந்த நிலையில் ஊர் முக்கிய பிரமுகர் ஒருவர், வேலை செய்த இடத்தில் பெரியசாமி திடீரென இறந்து விட்டார் என்றதும் எப்படி உடலை வாங்கி வரலாம்?, முறைப்படி போலீசாருக்கு தெரிவித்தீர்களா? என கேட்டார்.

இதனால், கணவர் பெரியசாமி சாவில் சந்தேகம் இருப்பதாக குணா சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று காலை உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, அவரது இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story