ஊழல் ஒழிப்பு பற்றி பேச பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை
ஊழல் ஒழிப்பு பற்றி பேச பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை என்று சட்டசபையில் மந்திரி ஜெயச்சந்திரா பேசினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.அசோக் எழுந்து, "லோக் அயுக்தா அமைப்பின் அதிகாரத்தை இந்த அரசு பறித்துவிட்டது. அந்த அமைப்பு பல் இல்லாத பாம்பு போல் ஆக்கப்பட்டுவிட்டது. இந்த அரசு ஊழல் தடுப்பு படையை தொடங்கியது. அதில் சித்தராமையா மீது 40–க்கும் அதிகமான ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதுவரை அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் மீது புகார் கொடுத்தவுடன் வழக்கை பதிவு செய்கிறார்கள். தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த அரசு ஊழல் தடுப்பு படையை உருவாக்கியுள்ளது" என்றார்.
அப்போது மந்திரி ஜெயச்சந்திரா குறுக்கிட்டு, "லோக் அயுக்தாவின் அதிகாரத்தை நாங்கள் பறிக்கவில்லை. அதற்குரிய அதிகாரம் அப்படியே தான் உள்ளது. ஊழல் ஒழிப்பு பற்றி பேச பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்களுக்கு தகுதி இல்லை. ஏனென்றால் முந்தைய ஆட்சியில் ஊழல் செய்து எடியூரப்பா உள்பட பல்வேறு மந்திரிகள் சிறைக்கு சென்றனர்" என்றார்.