தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்கள் மத்தியக்குழு ஆய்வு


தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்கள் மத்தியக்குழு ஆய்வு
x
தினத்தந்தி 21 Feb 2018 5:01 AM IST (Updated: 21 Feb 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

சுகாதார வளாகம் பயன்பாடு, குடிநீர் வினியோகம் குறித்து தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்கள் மத்தியக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்,

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி முதல் திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திற்கு மத்திய ஆய்வுக்குழு வந்தது. ஆய்வுக்குழு உறுப்பினர்கள் ஜி.என்.ஷா, குப்தா ஆகியோர் அடங்கிய குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வு செய்தனர்.

இந்த குழுவினர் திருவையாறு ஒன்றியம் இரும்புதலை, மேலசெம்மங்குடி, பட்டுக்கோட்டை ஒன்றியம் அணைக்காடு, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் விளாங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கன்வாடி மற்றும் பள்ளி கழிவறை பயன்பாடு, பராமரிப்பு, சுகாதார வளாகங்கள், பொது கழிவறைகள், திடக்கழிவு மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம், ஊராட்சியின் சுற்றுப்புற சூழல் மற்றும் தனிநபர் இல்ல கழிவறை பயன்பாடு ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது அனைத்து உதவி செயற்பொறியாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் இதர கள அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகள் உள்ளன. இதில் 6 ஊராட்சிகளில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். மீதமுள்ள 583 ஊராட்சிகளில் வருகிற ஏப்ரல் மாதம் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அங்கன்வாடி, நியாய விலைக்கடை, பள்ளிகள் முன்பு சுகாதார விழிப்புணர்வு வாசகம் அடங்கிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில காலை வணக்க கூட்டத்தின் போது கட்டாயம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகளையும், கழிவறை பயன்படுத்துவது அவசியம் குறித்து விளக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே போன்று துண்டுபிரசுரங்கள், சுவர் விளம்பரங்கள் போன்ற பல்வேறு வகையுக்திகள் மூலம் கழிவறை பயன்பாடு குறித்து விளக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 1708 அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு கட்டாயமாக கைகழுவும் பழக்கம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் இது தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். மத்தியக்குழு ஆய்வு மாவட்ட மக்களின் சுகாதார நிலையினுடைய தரக்குறியீடாக அமையும். இதன் மூலம் திட்டம் எந்த அளவுக்கு மக்களை சென்றடைந்துள்ளது என்பது தெரிய வரும்” என்றார்.

Next Story