கர்ப்பிணிப்பெண், குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கர்ப்பிணிப்பெண், குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Feb 2018 4:45 AM IST (Updated: 22 Feb 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணிப்பெண், குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் சீர்காழி திருமுல்லைவாசல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவருடைய மனைவி ரேவதி(வயது27). இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது ரேவதி கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ரேவதி நேற்று மதியம் வந்தார்.

அங்கு வந்த அவர், திடீரென தனது கையில் வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் மீதும், குழந்தையின் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதை பார்த்து ஓடி வந்து ரேவதியிடம் இருந்த மண்எண்ணை கேனை பிடுங்கி தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

எனது கணவர் என்னை விட அதிகம் படித்துள்ளதாக கூறி, என்னை ஏமாற்றி அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்து விட்டனர். இதுகுறித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் அதற்கும் பிறகும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்தேன் என்றார்.

கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணிப்பெண், குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை வெளிப்பாளையம் புதுமுகமதியார் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது76). ஓய்வுபெற்ற அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவரான இவர், தற்போது ஓய்வுபெற்ற நல அமைப்பு செயலாளராக உள்ளார். இவர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வுபெற்று இறந்துபோன பக்கிரிசாமி மனைவி முத்துலட்சுமிக்கு ஓய்வூதிய தொகை கிடைக்காததால், பலமுறை மாவட்ட கருவூலத்தில் மனு கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் இதுகுறித்து இதுவரை நடவடிக்கை எடுக்காததால் நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், விரக்தியடைந்த ராமலிங்கம், மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தால் தான் விடிவு கிடைக்கும் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ராமலிங்கத்தை விசாரணைக்காக நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Next Story