தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் சுற்றுச்சுவர், மளிகைக்கடையை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்


தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் சுற்றுச்சுவர், மளிகைக்கடையை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 22 Feb 2018 3:15 AM IST (Updated: 22 Feb 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

தொண்டாமுத்தூர் அருகே மளிகைக்கடை, வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. அரசு பஸ்சை ஒரு காட்டு யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரூர்,

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த தாளியூர் யானைமடுவு வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் 6 காட்டுயானைகள் கெம்பனூர் கிராமத்திற்குள் புகுந்தது. இதில் 3 யானைகள் அங்குள்ள பிள்ளையார் கோவில் தெற்கு வீதியை சேர்ந்த சவுந்தர்ராஜனின் (வயது 62) மளிகைக்கடையின் கதவை உடைத்து சேதப்படுத்தின. பின்னர் உள்ளே இருந்த அரிசி, பருப்பு மூட்டைகளை துதிக்கையால் வெளியே தூக்கி வீசி, உணவு பொருட்களை தின்றன.

பின்னர் அந்த காட்டுயானைகள் அங்குள்ள ரங்கம்மாள், லாவண்யா ஆகியோரது வீட்டின் சுற்றுச் சுவர் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. மேலும் தண்ணீர் குழாய்களை மிதித்து உடைத்தன. இதை அறிந்த பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், விளக்கு வெளிச்சம் பாய்ச்சியும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் மேலும் 3 காட்டு யானைகள், கெம்பனூர் அருகே உள்ள உலியம்பாளையத்தில் உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இது குறித்து தகவல் அறிந்த வனக்காப்பாளர் குமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

பிள்ளையார் கோவில் தெற்கு வீதியில் அட்டகாசம் செய்த காட்டுயானைகளை வனத்துறையினர் அட்டுக்கல் வழியாக வனப்பகுதியை நோக்கி விரட்ட முயன்றனர். அப்போது ஆத்திரம் அடைந்த காட்டுயானைகள் அங்கிருந்த ரத்தினசாமி என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளின. பின்னர் அந்த யானைகள் அதிகாலை 4.30 மணியளவில் அட்டுக்கல் வழியாக அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி யடிக்கப்பட்டது. வாழைத்தோட்டத்தில் அட்டகாசம் செய்த 3 யானைகள் தாளியூர் வழியாக யானைமடுவு வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டன.

காரமடை அருகே முள்ளிமானார், கோரபதி, வீரக்கல், பில்லூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதன் அருகே வனப்பகுதியில் உள்ள வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.

இந்த நிலையில் நேற்று காலை கோவையில் இருந்து பில்லூர் அணை பகுதியை நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டது. வீரக்கல் அருகே காலை 9.50 மணியளவில் வந்தபோது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டுயானை ஒன்று திடீரென்று பஸ்சை வழிமறித்து சாலையின் குறுக்கே நின்றது.

இதை கவனித்த டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். பஸ்சின் முன் காட்டு யானை நின்றதால் பயணிகள் பீதி அடைந்தனர். தொடர்ந்து 20 நிமிடங்கள் அங்கேயே காட்டுயானை நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த காட்டு யானை வனப்பகுதியை நோக்கி சென்றது. இதையடுத்து டிரைவர் பஸ்சை அங்கிருந்து இயக்கி சென்றார்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், முள்ளிமானார், கோரபதி, வீரக்கல் செல்லும் சாலையில் காட்டுயானைகள் அடிக்கடி உலா வருகிறது. எனவே காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story