வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளியின் வீட்டில் தீ பிடித்தது


வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளியின் வீட்டில் தீ பிடித்தது
x
தினத்தந்தி 22 Feb 2018 3:00 AM IST (Updated: 22 Feb 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளியின் வீட்டில் தீ பிடித்து நகை, பணம், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.

வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துவருபவர் மேத்யூஸ் (வயது48). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் மனைவி, மகனுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு புகைவது போல வாடை வந்துள்ளது. உடனே மேத்யூஸ் தனது மனைவி, மகனுடன் எழுந்து பார்ப்பதற்குள் வீடு முழுவதும் தீபிடித்து கொண்டது. இதனால் மூவரும் கூச்சலிட்டுக் கொண்டே வெளியே ஓடிவந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் இருந்த தொழிலாளர்களும் வெளியே ஓடிவந்து பார்த்த போது வீட்டிலிருந்த மின்கம்பிகளில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீடுகளிலிருந்த தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து முடீஸ் போலீஸ்நிலையத்திற்கும் வால்பாறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ வீடு முழுவதும் பரவியது. இதனால் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் வந்து எரிந்து கொண்டிருந்த தீயை முழுமையாக அணைத்தனர்.

இந்த நிலையில் வீட்டிலிருந்த டி.வி, கட்டில், பீரோ, பாத்திரங்கள், துணிகள், படுக்கைகள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை, 40 ஆயிரம் பணம், குடும்பஅட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார்அட்டைகள், ஏ.டி.எம் கார்டுகள், சிலிண்டர் எரிவாயு புத்தகம் அனைத்தும் எரிந்து சாம்பலாகியது. இது குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற முடீஸ் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்திற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதே ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் கடந்த ஆண்டும் இதே போல ஒரு தொழிலாளியின் வீடு மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்தது. இது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு ஒயர்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அனைத்து ஒயர்களும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே எஸ்டேட் நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் உள்ள மின் இணைப்பு ஒயர்கள் முழுவதையும் மாற்றிவிட்டு புதிதாக அமைத்துதரவேண்டும். வால்பாறையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய உயர் அதிகாரிகள் எஸ்டேட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள மின்இணைப்பு ஒயர்களின் தரத்தை பரிசோதித்து பழுதடைந்த நிலையில் இருக்குமானால் அவைகளை மாற்றுவதற்கு எஸ்டேட் நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story