கோர்ட்டு உத்தரவுப்படி தாயமங்கலம் கோவிலில் கடைகள் காலி செய்யப்பட்டன


கோர்ட்டு உத்தரவுப்படி தாயமங்கலம் கோவிலில் கடைகள் காலி செய்யப்பட்டன
x
தினத்தந்தி 22 Feb 2018 3:30 AM IST (Updated: 22 Feb 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவுப்படி தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டன.

இளையான்குடி,

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய கோவில் நிர்வாகம் முயற்சி செய்து அந்த நடவடிக்கை சம்பந்தமாக ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் கடை உரிமையாளர்கள் கலெக்டர், இந்து சமய அறநிலைய துறை மற்றும் அமைச்சரிடம் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மனுகொடுத்தனர். இதனையடுத்து உரிமையாளர்கள் தொடர்ந்து கடைகளை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் வளாகத்தில் இருக்கும் கடைகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அதன் உரிமையாளர்கள் தற்போது காலிசெய்தனர். கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் நிரந்தரமாக கடை நடத்தி வந்த நிலையில் தற்போது அவர்கள் தங்களது கடைகளை முழுமையாக காலி செய்துள்ளனர். கோவில் நிர்வாக அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் அனைத்து கடைகளும், கோவிலை சுற்றியுள்ள மற்ற ஆக்கிரமிப்புகளும் காலிசெய்யப்பட்டன.

இதுகுறித்து தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் கூறும்போது, வருகிற பங்குனி திருவிழா தொடங்கும்போது கடைகளை காலி செய்வதில் ஏற்படும் பிரச்சினை சுமுகமாக தீர்வு காணப்பட வேண்டும் என்று எண்ணியிருந்தோம். இருப்பினும் கோர்ட்டு உத்தரவுப்படி அறநிலையத்துறை அதிகாரிகளும், இளையான்குடி போலீசாரும் கடைகளை எந்தவித பிரச்சினையும் இன்றி காலிசெய்தனர். இனி பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். 

Next Story