திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு


திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு
x
தினத்தந்தி 22 Feb 2018 4:30 AM IST (Updated: 22 Feb 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்தினார். அப்போது கலெக்டர், மாநகராட்சி ஆணையருடன் இணைந்து துப்புரவு பணிகளை மேற்கொண்டார்.

திருச்சி,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். திருச்சியில் நேற்று தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக மத்திய பஸ்நிலையத்தில் கவர்னர் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக மாலை 4.30 மணி அளவில் கவர்னர் பன்வாரிலால்புரோகித் கார் மூலம் மத்திய பஸ் நிலையம் சென்றார். அவருடன் கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோரும் வந்தனர். மத்திய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த தூய்மை இந்தியா திட்டம் குறித்த கண்காட்சியை கவர்னர் திறந்து வைத்தார்.

கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்களை பார்வையிட்ட அவர், தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியையும் ஏற்று கொண்டார். பின்னர் அவர் மத்திய பஸ் நிலையத்தில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு குப்பைகளை அகற்றினார். அவருடன் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர். அதன்பிறகு மத்திய பஸ் நிலையத்தில் திருநங்கைகளுக்கான கழிவறைக்கு சென்று சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

அதன்பிறகு அங்கிருந்து அவர் கார் மூலம் பெரிய மிளகுபாறைக்கு சென்று அங்குள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். அந்த அங்கன்வாடி அமையம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்று இருந்தை கேள்விப்பட்டு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அந்த மையத்தில் இருந்த வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை ஆய்வு செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு இருந்த இரவுநேர தங்கும் விடுதியை கவர்னர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அங்கிருந்து கார் மூலம் விமானநிலையம் சென்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். கவர்னரின் நிகழ்ச்சியையொட்டி மத்திய பஸ் நிலையத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

முன்னதாக திருச்சி சுற்றுலா மாளிகையில் அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் கவர்னர் ஆய்வு நடத்தினார். இதில் கலெக்டர் ராஜாமணி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் மயில்வாகணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் விவசாய துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் செய்து முடிக்கப்பட்ட திட்டங்கள் பற்றி அதிகாரிகளுடன் விவரம் கேட்டு அறிந்தார். இந்த ஆய்வு கூட்டம் மதியம் 2 மணிக்கு முடிவடைந்தது.

பின்னர் மதியம் 2-30 முதல் 3-30 மணி வரை சுற்றுலா மாளிகையிலேயே பொது மக்கள், விவசாய சங்கத்தினர் ஆகியோரிடம் குறைகள் கேட்டு, அவர்களிடம் இருந்து கோரிக்கை அடங்கிய மனுக்களை பெற்றார். இதில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்தனர். இதில் புல்லம்பாடி பகுதியை சுற்றி உள்ள 8 கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் ஒன்றாக வந்து தங்கள் பகுதிக்கு விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர். கவர்னர் வருகையை முன்னிட்டு சுற்றுலா மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story