விழுப்புரம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு


விழுப்புரம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Feb 2018 3:00 AM IST (Updated: 22 Feb 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்,

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதய்குமார்ரெட்டி நேற்று விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு சிறப்பு ரெயில் மூலம் வந்தார். அவர் ரெயில் நிலைய ஒவ்வொரு நடைமேடைக்கும் சென்று பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி சரியாக உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து பயணிகள் தங்கும் அறையை பார்வையிட்ட அவர், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். மேலும் ரெயில் நிலைய சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த அவர் உடனே அவற்றை அகற்றும்படியும், ரெயில் நிலையத்தை சுகாதாரமாக வைத்திருக்குமாறும் ரெயில்வே நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதன் பிறகு ரெயில்வே அதிகாரிகள் தங்கும் அறை நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ரெயில் நிலைய நுழைவுவாயில் முன்பு பயணிகளுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தியிருந்ததை பார்த்த அவர் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். மேலும் விழுப்புரம் வடக்கு ரெயில்வே காலனி பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story