ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்


ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 22 Feb 2018 3:45 AM IST (Updated: 22 Feb 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு நடைபெறும் நேரத்தில் தேர்வு மையங்களுக்கு அருகில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வினாத்தாள் கட்டுக்காப்பக மையங்களுக்கு 24 மணிநேர ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து தரவேண்டும். மேல்நிலை வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களான 8 மையங்களில் இருந்தும், 10-ம் வகுப்பு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களான 10 மையங்களில் இருந்தும் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு தேர்வு நடைபெறும் நாட்களில் வினாத்தாள்கள் வழித்தட அலுவலர்கள் மூலம் காலை 7 மணிக்கு எடுத்து செல்வதற்கும் ஆயுதம் ஏந்திய போலீசார் நியமனம் செய்யப்பட வேண்டும்.

தேர்வு முடிவுற்ற பிறகு விடைத்தாள்களை, விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு எடுத்து வருவதற்கும் ஆயுதம் ஏந்திய போலீசார் நியமனம் செய்திட வேண்டும். தேர்வு மையங்களில் ஒழுங்கீனங்களை தவிர்க்கும் பொருட்டு உதவி கலெக்டர்கள் மேற்பார்வை செய்ய வேண்டும்.

தேர்வு காலங்களில் நடைபெறும் விழாக்களில் இரவு நேரங்களில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டும். மாணவர்களின் படிப்பிற்கு இடையூறு ஏற்படாதவாறு பயன்படுத்த வேண்டும். தேர்வு மையங்களுக்கு அருகில் தேர்வு நேரங்களில் 100 மீட்டர் சுற்றளவில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதை அதிகாரிகள் தடை செய்திட வேண்டும்.

மின்துறையானது தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் தேர்வு நேரங்களில் மின்வெட்டு ஏற்படா தவகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர் அழகப்பன் உள்பட கல்வித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story