பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதனுக்கு எதிராக தொடர் போராட்டம்: தலித் இயக்கங்கள் அறிவிப்பு


பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதனுக்கு எதிராக தொடர் போராட்டம்: தலித் இயக்கங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Feb 2018 4:30 AM IST (Updated: 22 Feb 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதனுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்போவதாக அனைத்து தலித் இயக்கங்களின் போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாநில அனைத்து தலித் இயக்கங்களின் போராட்டக்குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நீல.கங்காதரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாப்ஸ்கோ ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் புதுவை மாநில பா.ஜ. தலைவர் சாமிநாதன் பேசியபோது, நெட்டப்பாக்கம் தனித்தொகுதி எம்.எல்.ஏ. விஜயவேணி குறித்து அவதூறாகவும், உள்நோக்கத்துடனும், பொதுமக்கள் முன்னிலையில் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இடஒதுக்கீட்டு உரிமைக்கும், அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் அவர் பேசியுள்ளார்.

இது தொடர்பாக விஜயவேணி எம்.எல்.ஏ. கோரிமேடு வன்கொடுமை தடுப்பு பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகார் மீது இதுவரையில் காவல்துறையும் அரசும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் போராட்டக்குழு சார்பில் முதல்-அமைச்சர், டி.ஜி.பி.யை சந்தித்து புகார் அளித்துள்ளோம். கவர்னர் வந்தவுடன் அவரை சந்தித்து பேச உள்ளோம்.

மேலும் தனியாக வழக்கு தொடர்வது, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உள்பட அனைத்து உயர் பொறுப்பாளர்களுக்கும் விரிவான புகார் அனுப்ப முடிவு செய்துள்ளோம். பொது இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் உள்நோக்கத்துடன் பேசிய மாநில பா.ஜ. தலைவர் சாமிநாதனை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுவைக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த ஜனநாயக போராட்டங்களுக்கு அனைத்து சமூகத்தை சேர்ந்த சமூக நீதியில் அக்கறையுள்ள குறிப்பாக மார்க்சிய, அம்பேத்காரிய, பெரியாரிய சிந்தனையாளர்கள், மனித உரிமை சிந்தனையாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து உண்ணாவிரதம் தொடர் முழக்க போராட்டம், மக்கள் திரள் போராட்டம் மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story